பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம் 175 இழந்து பிராட்டிமாருடைய தன்மையை அடைவர். அந்நிலைக்கேற்பப் பாசுரங்களும் வேற்றுவாயாலே வெளிப்படும். இந்நிலையே ஆசாரிய ஹிருத்யம் ஞானத்தில் தம்பேச்சு; பிரேமத்தில் பெண் பேச்சு’ என்று குறிப்பிடப் பெற்றுள்ளது. ஆழ்வார்களும் ஆழ்வார் நாயகியராக நின்று பேசுவர். திருத்தலங்களின் வளங்களைப் பேசவேண்டு மானால் திருத்தலப் பயணம் இன்றியமையாதது. எம்பெருமான்களின் திருக்கோயில்கள் இயற்கை வளம் மிக்க சூழ்நிலையில் அமைந்திருக்கும். இந்தச் சூழ்நிலை வைணவ தத்துவத்தை விளக்குவதாகவே அமைந்திருக்கும், வைணவ தத்துவம் சித்து, அசித்து, ஈசுவரன் என்பது. ஒரு திவ்விய தேசத்தில் வாழும் மக்கள் யாவரும் சித்து என்ற தத்துவத்தைக் குறிக்கின்றனர் அசித்து என்பது திருக் கோயிலின் இருப்பிடம், அதன் சுற்றுப்புறச் சூழ்நிலையாகிய தோட்டம், தோப்பு முதலியவற்றைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். ஈசுவரன் என்பது அங்குக் கோயில் கொண்டிருக்கும் எம்பெருமானைக் குறிக்கின்றது. இதனால் திருத்தலப் பயணம் செய்வோர் ஒருவித பக்தி நிலையை அநுபவிப்பதோடு வைணவ தத்துவத்திலும் ஆழங்கால் படுவது என்ற ஐதிகமாக அமைகின்றது. சைவ தத்துவமும் பதி, பசு, பாசம் என்ற மூன்றாக அமைகின்றது. திருத்தலங்கள் யாவும் இவற்றை விளக்குவன வாக அமைகின்றன என்று கூறுவதும் பொருந்தும். திருத்தலங்கள்: ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்ற தலங்கள் 108. பாசுரங்களில் திருத்தலப் பெயர்கள் அமைந்தாலேயே அவை மங்களாசாசனம் பெற்றனவாகக் கொள்ளப் பெறும். - 3. ஆசா. ஹிரு. - 118