பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்க நூல்கள் 7 10. தனிப்படர் மிகுதி. இஃது இன்பத்துப் பாலில் 12வது அதிகாரம். தனிப்படர் மிகுதி என்பது தனிமையாகிய துன்பப் பெருக்கம் எனப் பொருள்படும். காதலன் தன்னைப் பிரிந்து சென்றதால் ஆற்றாது மேனி வெதும்பி, கண்ணிர் உகுத்து, நிறம் மாறிய ஆரணங்கு, தனிமை தாங்காது தளர்கின்றாள். அன்னாளின் தனிமை பொறாத் துயர்க்கடலை உரைப்பதே இந்த அதிகாரம். இதிலுள்ள பத்துப் பாக்களும் காதலியின் கூற்றாகவே அமைந்துள்ளன. புத்தின்பம் துகர்ந்து உடன் பிரிந்த காதலர் தனிமை பொறாது ஆராத் துயர் உறுதல் இயல்பேயன்றோ? அத்துயர் பிரிவுற்ற ஆண் பெண் இருபாலார்க்கும் ஒருபடித்தாக இருக்க வேண்டியதே முறை. இங்கு வள்ளுவப் பெருந்தகை தனிப்படர் மிகுதியை முற்றும் காதலிபால் ஏற்றியுள்ளார். 'தலைவன் அறமும் பொருளும் நோக்கிப் பிரிந்தானாதலின் தனிப்படர் மிகுதி அவன்கண் இல்லையாயிற்று' என்று உரைப்பர் பரிமேலழகர். பிரிந்தது எது நோக்கியாயினும் பிரிவுத்துயர் உணர்வு எவ்வாறு அவனிடம் இல்லாது போகும் ? இவ்வாறு கூறுவது உளவியல் உண்மைக்கும் பொருந்தாது. அவனிடம் அத்துன்பம் இருக்கத்தான் செய்தது. ஆயினும் அவன் ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்ற உணர்வுகளால் அதனை அடக்கிக் கொள்ளுகின்றான் என்று கருதுதல் தான் பொருத்தமாகும். பிரிந்த செய்கை அவனுடைய தாகலின், பிரிவு நல்கிய அவனைக் கடியும் முறையில் தலைவியின் துயரையே காட்டி வருகின்றார் ஆசிரியர், அம்முறையிலேயே இத் தனிப்படர் மிகுதியும் ஆக்கப் பெற்றுள்ளது என்று கொள்ளலே ஏற்புடைத்தாக அமைகின்றது. பிரிவுத்துயர் அவளைப் போல் அவனுக்கு இல்லையென அவள் கூற்றாக ஆசிரியர் கூறுவது கொண்டு உண்மையிலேயே அவன் அந்நோயினின்றும் நீக்கப் பெற்றான் எனக் கூறுதல் ஆகாது. அவன் பிரிந்து