பக்கம்:தமிழ்க்கடல்-இராய.சொ.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் இதழாசிரியர் சொற்பொழிவாளர் தொகுப்பாசிரியர் நூலாசிரியர் சுவைஞர் நினைவுக் கலைஞர் எனப் பன்முக ஆற்றல்களைக் கொண்டவர். தமிழிலக்கியம் அனைத்தையும் எழுத்தெண்ணிக் கற்ற ஏந்தல். ஆதலால் இவர் தம் கவிதை தமிழ்வளம் பொதுழியது. மரபுவழிக் கவிஞர். தமிழ் மரபில் இவர் யாத்த காந்திவழிச் சிற்றிலக்கியங்கள் 'காந்திக் கவிதை என்னும் பெருநூலாகத் தொகுக்கப் பெற்றுள்ளது. அதன் சிறப்பினை மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் திறனாய்ந்து தெளித்து அணிந்துரை அளித்துள்ளார். தமிழில் காந்தி அடிகள் பற்றி வந்த நூல்களில் இச்சிற்றிலக்கியத் தொகுதி பெறும் இடம் பெரிய இடமாகும். காந்தி புகழ் பாடுவதில் தனிச்சிறப்புப் பெற்றது. காலவெள்ளம் அழிக்க முடியாத கவித்துவம் கொண்டது இந்நூல். தேசிய இலக்கியச் செப்பேடு, விடுதலைப் போரின் பொன்னேடு. இராய.சொ. தன்மானம் உடைய தமிழ்க் கவிஞர். சங்கக் கவிஞர்கள் போல பெருமித வாழ்வினர். கபிலரைப் போல புலனழுக்கற்றவர்; மாசறு காட்சியர். இவர் நல்ல சுவைஞர். இவரைச் சுற்றி, பூவில் மொய்க்கும் வண்டுகளைப் போல, தமிழ்ச் சுவைஞர் குழு சூழ்ந்திருக்கும். இவர் பாட்டைச் சொல்லும் முறையிலேயே பாட்டு நம் நெஞ்சில் பதிந்துவிடும். அழுத்தமாகச் சொல்லுவார். திருத்தமாகச் சொல்லுவார். ஒசைநயம் பிறழாது ஒலிநயம் சிறக்கச் சொல்லும் சிறப்பு இவரின் தனிச்சிறப்பு. இவருடைய நினைவாற்றல் கல்லெழுத்துக்களைப் போன்றது. இராய.சொ. நினைத்த மாற்றத்தில் ஆயிரக்கணக்கான பாடல்களை அடிபிறழாமல் சொல்லும் ஆற்றலாளர். தம் நூல்களின் மூலம் இன்றும் நம்மோடு வாழ்கிறார்.