பக்கம்:தமிழ்க் காதல்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

தமிழ்க் காதல்


திணையும் துறையும் வகுத்துத் தனியிலக்கியம் காணும் எண்ணம் வேறு எவ்வினத்துக்குத் தோன்ற முடியும்? காதலுக்கு அடுத்த உலகப் பேருணர்ச்சி மறம் ஆதலின், அதற்கும் புறத்திணையென ஒரு தனியிலக்கியம் தமிழர் காண்பாராயினர். காமமும் வீரமும் அல்லது சிறந்த வாழ்க்கை யுணர்ச்சிகள் வேறில்லை. இவ்விரண்டிற்கும் இரண்டு இலக்கியங்கள் கண்ட தமிழ்மொழியின் முழுத்திறம் நமக்குப் பெருமிதம் தருவதாகும். இவ்விரண்டுணர்ச்சியுள் வீரம் ஒரு பாலார்க் கிடையே நிகழ்வது; காமம் பால்மாறி நிகழ்வதாகலின், ஒவியக் காட்சிக்கும் கற்பனைத் தொடுப்புக்கும், சுவை மிகுதிக்கும், அகத்திணையிலக்கியமே இடங்கொள்வது என்று புலவோர்கள் போற்றினர். வீரத்தினும் காதலுக்குத் தலைமை நல்கினர். மறத்தைப் பாடும் முடிவில் காதலை இணைத்துக் காட்டினர். பத்துப்பாட்டில் உள்ள பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மலைபடுகடாம் முதலியவை புறப்பாட்டுக்கள் ஆயினும், இறுதியில் காதல் வெண்பாக்கள் அமைந்திருப்பதை நினைக. தமிழுக்கு ஒரு தனிப்பெரு முதல் நூலான திருக்குறள் காமத்துப்பாலென ஒரியல் வகுத்து ஐந்தினைத் துறையனைத்தையும் செவ்விபெறப் பாடுகின்றது. உலகிற்கு அறங்கரைய வந்த திருவள்ளுவர் காமக்கூறுகளை அகத்தினை நெறிப்படிப் பாடுவானேன்? தமிழினத்து அறிவின் இமயத்துப் பிறந்த தூய புலநெறி வழக்கைச் சொல்லாதுவிடுதல், தமிழ்ப் புலமை பெற்ற தமக்கும், தமிழில் எழுதப்படும் தம் வாழ்வு நூலுக்கும் இழுக்காம் என்று கருதியிருப்பர். மேலும் இக் காதல்நெறி நன்றெனத் தெரிந்திருந்தும், மக்கட்கு அறமாக உரையாவிடில், உலகிற்குச் செய்த வஞ்சகமாம் என்றும் கருதியிருப்பர். தமிழ் மொழிக்கண் தோன்றிய சமய விலக்கியங்களும், அறவிலக்கியங்களும் பொருளாலும், வடிவாலும் அகத்திணைக்குட்பட்ட கடன் சொல்லுந் தரமன்று. கடவுட் காதலைப் பாடியருளிய ஆழ்வார் நாயன்மார்கள் மக்கட் காதலுக்கென வகுத்த அகத்திணையுலகச் சுவடுகளைப் பின்பற்றிய தாலன்றோ - தெய்வ அன்பு அக இலக்கியத் தடத்துப் பாய்ந்ததாலன்றோ - தமிழகத்தில் இறைப் பாசுரங்கள் புதுமையும் தனிமையும் பெற்ற ஒர் இலக்கியவுலகமாக விளங்குகின்றன: தெய்வப் புலவர்களுக்கு அகத்திணைப் புலமை இல்லாதிருந்திருக்குமேல், இப் பாசுரங்களின் இலக்கியத்தரம் மிகக் குறைவுபடும், இலக்கியமோ என்ற ஐயத்திற்கும் உரியதாய்விடும் .

1. டாக்டர் ராபிசே, திருவள்ளுவர் நூல் நயம். ப. 86. V.R. Ramachandra Dikshitar; Studies in Tamil Literature and History, p. 275,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/112&oldid=1238386" இலிருந்து மீள்விக்கப்பட்டது