பக்கம்:தமிழ்க் காதல்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

தமிழ்க் காதல்


கூட்டங்கள் நிகழ்ந்தன எனவும், தேரேறியும் வந்து இக் களவு நடத்தும் துணிவு இருந்தது எனவும் அறிகின்றோம். இவ்வூரில் நள்ளிரவில் எவ்வளவோ தேர்கள் வந்து செல்கின்றன. என்னைப் போன்ற இளமகளிர் பலர் இவ்வூரில் வாழ்கின்றார்கள். துயர் செய்யாத அன்புத் தாயைப் பெற்றிருப்பது அவர்களின் நல்ல காலம் ஒர் தேர் வந்து போயிற்று என்று யாரோ சொல்லக் கேட்ட என் அன்னை ஐயப்பட்டு என்னைத் தொல்லைப்படுத்துகின்றாள்.' பனிக்கழி துழவும் பானாள் தனித்தோர் தேர்வந்து பெயர்ந்த தென்ப அதற்கொண்டு ஒரும் அலைக்கும் அன்னை பிறரும் பின்னுவிடு கதுப்பின் மின்னிழை மகளிர் இளையரும் மடவரும் உளரே அலையாத் தாயரொடு நற்பா லோரே (குறுந். 246) என்று ஒர் இளநங்கை கொள்ளும் பொறாமையிலும், ஊரில் களவு மிகுதியும் நடந்தது என்று அறியலாம். சங்ககாலத்தில் வரையாது உடன்போயினார் பலர் என்றால், களவொழுக்கம் ஒழுகினார் பலப்பலராதல் வேண்டுமன்றே. மற்றும் ஒரு சான்று மகள் உடன்போனபின், செவிலி தேடிப் புறப்பட்டாள். பாலை நிலத்தின் வழிநெடுகச் சென்றாள். நடந்து நடந்து முதிய கால்களும் தள்ளாடின. ஆணும் பெண்ணும் இருவர் இருவராகத் தூரத்தே வரக்கண்டாள். தம்மவரோ என்று ஆசையொடு ஒவ்வொரு முறையும் பார்த்தாள். வேறு இளையவனும் இளையவளுமாக இருக்கக்கண்டு அவலித்தாள். காதலராக எதிரே வருவார் பலரிருந்தும், வேற்றவராக உள்ளனரே என்று ஏங்கினாள். உற்றுப் பார்த்துப் பார்த்து அவள் கண்கள் ஒளி மழுங்கின. காலே பரிதப் பினவே கண்னே நோக்கி நோக்கி வாளிழந் தனவே அகலிரு விசும்பின் மீனினும் பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே! (குறுந். 44) உடன்போகும் காதற்சோடிகள் வானத்து மீன்களினும் பலராவர் என்ற உவமையால், பண்டைத் தமிழகத்தில் களவின் பெருக்கம் நிலவிற்று என்பது அங்கைநெல்லி, 1 பிறர் என்றது பொதுவாக வழிப்போவாரையெல்லாம் குறியாது. புணர்ந்துடன் வரும் களவுக் காதலர்களையே குறிக்கும். “மீண்டாரென உவந்தேன் கண்டு தும்மை இம் மேதகவே பூண்டார் இருவர் முன்போயினரே" என்னும் திருக்கோவைப் பாட்டில் (244) குறுந் தொகையின் உரைப் பொருளைக் காண்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/114&oldid=1238402" இலிருந்து மீள்விக்கப்பட்டது