பக்கம்:தமிழ்க் காதல்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைத் தோற்றம்

109


கருத்து வற்றலாம். இலக்கியத் தொடைக்குக் கருத்துச் சுரத்தலால், தவக்குழந்தை காலக் குழந்தையினும் ஏற்றமுடைத்து என்றோ, நாட்கடந்து பெறும் மகப்பேறே சிறந்தது என்றோ யாரும் சொல்லார் இல்லறத்திற்குக் குழவிப்பேறு வேண்டும். அப்பேறு முன் கிடைப்பினும் பின் கிடைப்பினும் முடிவு ஒன்றே. சமுதாயம் இருவகைப் பேறுகளையும் வரவேற்கவே செய்கின்றது. இளம் பெற்றோர்க்கும் முதியபெற்றோர்க்கும் மகிழ்நிலை வேறாயினும், சமுதாயத்தின் மனநிலை ஈரிடத்தும் ஒன்றே. அதுபோல களவின் வழிவந்த மறைவுக் கற்பினையும், களவின் வழிவாரா மரபுக் கற்பினையும் சமுதாயம் ஒன்றுபோல் நோக்குகின்றது; ஏற்றத்தாழ்வு சுட்டுவதில்லை. - இலக்கியத்தில் ஆளப்பட்ட பொருட்கூறுகளை ஒப்புநோக்கித் திறங்காணின், ஒருண்மை புலனாகும். இலக்கியப்படு பொருள்கள் அறஞ்சான்றனவாக வேண்டும் என்பதில்லை. நல்வாழ்வுக்கு வேண்டும் பொருள்கள் கவிதைநயஞ் சான்றனவாக வேண்டும் என்பதும் இல்லை. பெற்றோர் பேசிமுடிக்கும் திருமணப் புணர்ச்சியில், புலவரின் கற்பனைக்கு இடமேது? காதலர்தம் வேட்கைக் கொள்ளைக்கு இடமேது? எண்ணத் துடிப்புக்கு இடமேது? ஆதலின் சங்கச்சான்றோர்கள் ஆற்றொழுக்குப் போன்ற இயல்புமணத்தைப் பாட முன்வரவில்லை. பாடாமையினால் அதன் சமுதாய மதிப்புக் குன்றவில்லை. மரபுநெறிச் செல்வாக்கு மண வாழ்வுக்கு மேற்சொல்லிய இரண்டும் தக்க நெறிகளே என்று தமிழ்ச் சமுதாயம் உடன்பட்டது. "களவொழுக்கமின்றியே தனிக் கற்புமுறை முன்பு வழங்கிய தில்லை” என்று தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி என்னும் நூலாசிரியர் மொழிகுவர். இக் கருத்துக்கு முன்னர் யான் எடுத்து மறுத்த இறையனார் அகப்பொருள் நூற்பா உண்டன்றே, அதனை ஏதுக் காட்டுவர். களவு நெறியல்லது கற்புக்கு வேறு நெறி தமிழகத்து இல்லையா? எல்லாத் திருமணங்கட்கு முன்னும் காதலர்களிடைக் களவு நிகழ்ந்தது கொல்? இன்னவர் கருத்து உண்மையாயின், மகள் தன் களவைப் பெற்றோர்க்கு ஏன் மறைத்தல் வேண்டும்? களவறிந்த பெற்றோர் குடிமைக்கு இழுக்கென வெகுள்வானேன்? பின்னர் உடன்போதல் எற்றுக்கோ? கற்புக்குக் களவு இன்றியமையா இயல்பு நெறியாயின், களவுக்கு மறையென்ற பெயர் பொருந்துமோ? களவுத் தேர்ச்சி சமுதாயம் உடன்பாடளித்த நெறியாயினும், களவாளர்கள் தம் ஒழுக்கம் புலனாகிவிடுமோ என்று சமுதாயத்திற்கும் குடும்பத்திற்கும் I. A.C. Bradley: Oxford Lectures on Poetry, p. 11, 2. தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, ப.12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/123&oldid=1238412" இலிருந்து மீள்விக்கப்பட்டது