பக்கம்:தமிழ்க் காதல்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

தமிழ்க் காதல்



மரபு நாட்டம் எல்லார்க்கும் ஊறிக்கிடந்தமை மேலைச் சான்றுகளால் தெளியலாம். களவு நெறிப்பட்ட வரைவு என்பதனைக் குறுந்தொகைப் பாட்டும் (374). களவு நெறியாக விடாது மரபு நெறியாக்கிய வரைவு என்பதனைக் கலித்தொகைப் பாட்டும் (41) காட்டி நிற்கின்றன. பல்வேறு துறைகளையும் அத்துறைத் தோற்றத்திற்கு உரிய மனப் பாங்குகளையும் நோக்கின், தமிழ்ச் சமுதாயத்தில் மரபு நெறிக்கிருந்த நன்மதிப்பு வெளியாகும். அகத்திணைப் பாடல்களிலிருந்து, அஃதாவது பெயர் சுட்டப்படாத் தன்மைப் பாடல்களிலிருந்து இதுவரை மேற்கோள்கள் கண்டோம். புறப்பாடல்களும், அஃதாவ்து பெயர் சுட்டும் வரலாற்றுப் பாடல்களும் இக்கருத்தை வலியுறுத்தக் காண்போம். சங்கச் சான்றோர் கபிலர் சான்றோர் பலரால் மதிக்கப் பெற்றவர் முழுக்க முழுக்கக் களவியல் பாடிய காதற் புலவர் வள்ளல் பாரி இவர்தம் நண்பன். பாரி இறந்தபின், அவன் பெண் மக்கள் இருவர்க்கும் தக்க கணவரைத் தேடும் பொறுப்பு கபிலருக்கு ஏற்பட்டது. களவு பாடிய கபிலர் என் செய்தார்? இருமகளையும் அழைத்துக்கொண்டு குறுநில மன்னன் விச்சிக்கோனிடம் சென்றார், பரந்தோங்கு சிறப்பினை யுடைய பாரி மகளிரை யான் கொடுப்ப மணந்து கொள் என்று வேண்டினார். விச்சிக்கோன் மணக்க உடன்படவில்லை. அதன்பின் குறுநில மன்னன் இருங்கோவேள்பால் சென்றார்; இந் நங்கையரை யான் கொடுப்ப மணஞ்செய்து கொள்க என்று இரந்தார். இருங்கோ வேளும் இசைந்தானில்லை. இவ்வரலாற்றுக் குறிப்புக்களைப் புறநானூற்றில் அறிகின்றோம். பரந்தோங்கு சிறப்பிற் பாரி மகளிர் யானே, பரிசிலன் மன்னும் அந்தணன்; நீயே வரிசையில் வணக்கும் வாண்மேம் படுநன் நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி (புறம். 200) இவர்யார் என்குவை யாயின் இவரே. நெடுமாப் பாரி மகளிர்; யானே தந்தை தோழன் இவரென் மகளிர் அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே. யான்தர இவரைக் கொண்மதி (புறம். 201) இப் புறநானூற்றடிகள் மரபுநெறி வழக்கைச் சொல்லுகின்றன. “தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர்” (கலி. 9) என்பது களவுநெறியின் இலக்கணம். ஈண்டோ, நினக்கு யான் கொடுப்பக் கொள், யான் தர இவரைக் கொள்' என்று கபிலர் தற்சுட்டிச் சொல்லுகின்றார். இது மரபு மணப்பேச்சாகும். இப் புறநானூற்றடி களைக் “கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே” (தொல். 1089) என்னும் அகவிலக்கணத்தோடு ஒப்பிட்டுக் கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/126&oldid=1238423" இலிருந்து மீள்விக்கப்பட்டது