பக்கம்:தமிழ்க் காதல்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைத் தோற்றம்

117


ஒழுங்குபட்டுவிட்டது. மணமுறைகள் நெறிப்பட்டன; மக்கள் மனங்கள் வழிப்பட்டன. ஆதலின் கொடுப்பக் கொள்ளுதல் என்னும் முறை எல்லார் நெஞ்சத்தும் இயல்பாகப் பதிந்து கிடந்தது. மக்கட்கு மணஞ்செய்து வைப்பதைப் பெற்றோர்கள் தம் இல்லறக் கடமையாகக் கொண்டனர். பலர் அஞ்சுவதுபோல, வளர்ச்சிக்கும் மாறுதலுக்கும் மரபு இடையூறாகாது.போலி மாறுதல்களையே மரபு தடுக்கும்; அவற்றைத் தடுக்கவல்லதும் ஆகும். மரபும் அறிவும் இணைந்து செல்லும் தமிழ்ச் சமுதாயத்தில், இளையவர்கள் தாமே தேர்ந்துகொள்ளும் களவு நெறியும் போற்றப்பட்டது, இலக்கியங் களால் பரப்பப்பட்டது. சான்றோர்களால் பாடப்பெற்றது, இலக்கணம் வகுக்கப்பெற்றது. மரபு நெறியைப் பன்மானும் விளக்கி வரையும் இவ்வமயத்துக் களவு நெறியையும் உடன்நினைந்து கொள்க. கொண்டாற்றான் தமிழ்ச் சமுதாயத்தின் நாகரிக முழுமையும், அகவிலக்கியத்தின் முழுவனப்பும் அறியமுடியும் என்று வலியுறுத்துவல். சங்கப் பின்னூல்கள் பிற்காலத் தமிழ்ப் புலவர்கள் மரபுநெறியினும் களவு நெறிக்கு ஒர் ஏற்றமும் முதன்மையும் கொடுத்துவிட்டனர். களவு நெறிதான் கற்புக்கு முன் நிகழும் தமிழ்நெறி என்ற எண்ணத்தை விதைத்துவிட்டனர். திருத்தக்கதேவர் சீவகன் பல மணத்தைப் புனையும் போதெல்லாம் களவினையும் காட்சி ஐயம் முதலான துறைகளையும் வைத்துப் பாடத் தவறுவதில்லை. மணத்திற்குமுன் காதலர்தம் கண்கள் கவ்விக்கொண்டன என்று கற்பிக்கும் ஒர் இலக்கியப் பேராசை தேவருக்கு இருப்பக் காண்கின்றோம். தேவர் வழி வந்த கம்பரும் மிதிலைக்காட்சிப் படலத்தில் இராமனும் சீதையும் உள்ளம் ஒன்றிய களவுப்புணர்ச்சியைச் சுவையூற அமைத்துக் காட்டுவர், "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்', "இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார்” என்று கண்வழிக் காதலைப் புனைவர். இவ்வமைப்பு வான்மீகத்தில் இல்லை. இராம காதையைத் தமிழிற் பாடிய கம்பர் தமிழ் நெறிக்கேற்ப வகுத்துரைத்தார் என்று கற்றார் பலர் எடுத்துரைக்கின்றனர். முற்கூறியாங்குக் களவும் தமிழியமே யாதலால், தமிழ்க் காப்பியங்களில் வரைவுக்கு முன் காதலர்களின் காட்சியும் துணிவும் கவலையும் உள்ளம் புணரலும், மெய்யுறு புணர்ச்சியும்கூட இடம்பெறல் தவறன்று. நன்முறையாகும். ஆதலின் தேவரும் கம்பரும் நெஞ்சக் கலப்புக் கூறியபின் திருமணம் செய்விப்பதை வரவேற்போம். இருவரும் அங்ங்னம் கூறாது, தம் காப்பிய மாந்தர்கட்குத் திருமணம் செய்து வைத்திருந்தாலும் அம்முறையையும் வரவேற்போம், அதுவும் தமிழியமாதலின், 乓.P1。 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/131&oldid=1238428" இலிருந்து மீள்விக்கப்பட்டது