பக்கம்:தமிழ்க் காதல்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைத் தோற்றம்

145


அவ்விடத்தை விட்டு அகலவேண்டாமா? நான் மணமானவன், இருமாதரை எண்ணேன் என்றுஇராமன் முதலிலேயே தெளித்திருக்க வேண்டாமா? அவ்வாறெல்லாம் செய்திலன். இலக்கியத்தில் அருமையான இத்தகைய காட்சியைக் கம்பர் எளிதில் விட்டுவிட விரும்பவில்லை. இலக்கியப் பாத்திரங்கள் புலவனுடைய அடிமைகள்; அவன் ஆட்டினால் ஆடவேண்டும்; அடக்கினால் அடங்க வேண்டும். ஆதலின், இராமன் சட்டெனத் தன் கருத்துக் களைத் தெளித்திலன் என்றால், அங்ங்னம் தெளிவிக்கக் கம்பர் விட்டிலர் என்பதுதான் இலக்கியப் பார்வை. சாதி குறுக்கிடா விட்டால், இராமன் இசைவான் போலும் என்று கருதிக் கொண் டாள் ஏழைச் சூர்ப்பனகை என் தந்தைதான் அந்தணன்; மற்று என் யாயோ அரக்கக் குலத்தவள் என்று சாதியழிவு சாதிக்கலப்பு - சுட்டியும் பார்த்தாள் சூர்ப்பனகை எனவும், அரக்கியை மானிடன் மணத்தல் என்பதுவும் பொருத்தமில்லை என்று மறுத்தான் இராமன் எனவும் மேலும் காண்கின்றோம். சமய எழுச்சிக் காலத்துப் பாவை நோன்பு மிகப் பரவியது. இளம்பெண்களுக்கு இசையோடு சமயப்பற்றைக் குழைத்து ஊட்டும் பொருட்டு ஆண்டாள் திருப்பாவையும் மணிவாசகர் திருவெம்பாவையும் தோன்றின. சமயக் குறிக்கோள் உடைய பாவைச் சிறுமியர்கள் இறைவனைத் தொழுது பாடுங்கால் சில வேண்டுகோள் இடுவர். தம் இல்லற வாழ்க்கை சமய நெறியோடு அமையவேண்டும் என்று விழைவர். தம்மை வரிக்கும் கணவனும் சமய அடியவனாக இருந்தாற்றானே, வாழ்வு சிறக்கும் என்று ஆசைப்படுவர். - - - உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம் உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கனவ ராவார் அவருகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் எங்கள் பெருமான் உனக்கொன் றரைப்போங்கேள் எங்கொங்கை நின்ன்ன்ப ரல்லார்தோள் சேரற்க. மாணிக்க வாசகரின் திருவெம்பாவைப் பெண்கள், சிவனடியார் களையே காதலர்களாகக் கொள்ளத் துடிக்கும் உறுதியையும், சிவனுக்கு அன்பர் அல்லாதாரைத் தீண்ட நினையாத் துணிவையும் காண்க, பள்ளுப்பாட்டுத் தமிழ்ச் சிறுநூல் வகையினுள் ஒன்று. முக்கூடற்பள்ளு நூலில் அப்பள்ளன் இருமனைவியர்களை உடையவன் என்றும், மூத்தவள் வைணவப்பள்ளி, இளையவள் சைவப்பள்ளி என்றும், இப்பள்ளியர் தம்முள் ஏசிக் கொள்ளும் போது மாற்றுச் சமயங்களை இகழ்ந்தனர் என்றும் அறியவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/159&oldid=1238493" இலிருந்து மீள்விக்கப்பட்டது