பக்கம்:தமிழ்க் காதல்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

தமிழ்க் காதல்


வினையை முடித்து வீடு திரும்புகின்றான் என்பது ஒருதுறை. இதுபற்றிய முல்லைப் பாட்டெல்லாம் மழை முழக்கையும், சிறுதுளியையும், நீருண்ட பிணைமான்புணர்ச்சியையும், தாதுண்ட வண்டின் இசையையும், செம்பவளப் பூச்சியின் வனப்பையும், வண்டுவாய் திறக்கும் முல்லை மொட்டின் நறுமணத்தையும், நிலத்தின் குளிர்ச்சியையும், நெடுவழியின் தண்பதத்தையும், காதலர் உள்ளமொடு கற்பார் உள்ளமும் குளிரப் புனைவு செய்கின்றன. 'வினைமுற்றிய தலைமகன்’ என்ற தொடருக்குப் பொருளிட்டும் வினையை முடித்தவன் என்றோ, போர் செய்யும் வினையை முடித்தவன் என்றோ பொருள் கொள்ளலாம்; எனினும் இத்துறைப் பாடல்களில் போர்க்குச் சென்ற தலைவர்களின் வருகையே மிகவும் இடம் பெற்றுள்ளது. வினைவலம் படுத்த வென்றியொடு மகிழ்சிறந்து போர்வல் இளையர் தாள்வலம் வாழ்த்தத் தண்பெயல் பொழிந்த பைதறு காலை (அகம். 74) நன்கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி o, வந்துதிறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து. வண்பெயற் கவிழ்ந்த பைங்கொடி முல்லை வீகமழ் நெடுவழி யூதுவண் டிரியக் - காலை யெய்தக் கடவுமதி (அகம். 124) புலனணி கொண்ட காரெதிர் காலை ஏந்துகோட் டியானை வேந்தன் பாசறை வினையொடு வேறுபுலத் தல்கி (அகம். 304) இவ்வகைப் பாடல்களில் காரும் போரும் இணைந்து வருதலைக் காண்க. பண்டைத் தமிழ் அரசர்கள் கார்காலத்திற்குள் திறைகொடுத்தோ திறைவாங்கியோ போரைச் சந்துசெய்து கொள்வர்; அல்லது போர்ை நிறுத்தி வைப்பர். ஆவணி தொடங்கிப் பெய்யும் ஒயாப் பெருமழைக் காலத்தில் போரிட இயலாது. யானை குதிரை தேர் காலாள் என்ற நாற்படையும் வலியொடு இயங்கமாட்டா. இயற்கையொடு முரணிப் படைகளைப் போருக்கு ஏவுவதில்லை. ஆதலின் இருதிற மன்னர்களும் காரின் தொடக்கத்துப் போரை நிறுத்தி விடுவது முறையும் ஆயிற்று. போர் நின்றவுடன், வேந்தரும் மற்ற வரும் தத்தம் வீடுநோக்கி மீளுதல் வழக்கம். திரும்பிவருவர் என்று தலைவியர்கள் எதிர்ப்பார்த்திருப்பதும் வழக்கம். கார்காலத்து வருவேன் என்று தலைவர்கள் சொல்லிச் செல்வதும் வழக்கம். இதனால் முல்லைத்திணைக்குக் கார்ப்பருவம் வகுத்தது பொருத்தமே எனவும், தமிழ் நிலவியல்புக்கு உகந்ததே எனவும் தெளியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/170&oldid=1238507" இலிருந்து மீள்விக்கப்பட்டது