பக்கம்:தமிழ்க் காதல்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

தமிழ்க் காதல்



புறப்பொருள்மேல் இயற்கை செல்லாமை

சங்கத்தமிழ் இலக்கியத்தில் மக்களின் காதற்செய்கைக்கு இயற்கைப் புனைவு உண்டு; ஏனைச்செய்கைகளுக்கு அப்புனைவு இலக்கண நெறியால் இல்லை என்பதனால் அறியப்படுவது யாது? தமிழினம் காமம் என்னும் பாலுணர்ச்சி மிகப்பெற்றது. தமிழ் நெஞ்சம் பாலெண்ணம் மிக்கோடும் நெஞ்சம். தமிழர் பாலுணர்வோடு இயற்கையை நாடுபவர். இயற்கையிலிருந்து அவ்வுணர்வையே பெருக்கிக் கொண்டவர். அன்னவர்க்குப் பிறவுணர்வுகளை இயற்கை அத்துணை ஊட்டியதில்லை. வயப்புலியும் வெண்கோட்டு யானையும் பொருத மறக்காட்சியை ஒரு தமிழன் கண்டான். அச்சம் தொலைந்து வீரம் பெற்றான் என்று பாடியிருக்கலாம். ஒரு வெள்ளாட்டைக் குள்ளநரி கழுத்திற் பாய்ந்து கவ்விற்று ஆட்டின் ஈனக் குரலைக் கேட்டான் வழிஞன் வாழ்வில் இரக்கவுணர்ச்சி கொண்டான் என்று எடுத்துக் காட்டியிருக்கலாம். ஈசல்களின் உதிர்ந்த இறகுக் குவியலைக் கண்ணுற்றான்; அது யாக்கை முதலான நிலையாமைகளை ஒரு மெய்யனுக்கு உணர்த்திற்று எனப் புலப்படுத்தியிருக்கலாம். பறந்து சென்ற காக்கை கொட்டிக் கிடக்கும் சோற்றுத்திரளைக் கண்டது: கரைந்து இனத்தையெல்லாம் கூட்டித் தின்றது. இக்காட்சி சுற்றத்தழுவுதல் என்ற சமுதாயவுணர்வை ஓர் தமிழனுக்குக் கற்பித்த்து எனச் சுட்டியிருக்கலாம். ஒடும் புனல் ஊக்கத்தையும், வானோங்கிய மலை உயர்ந்த உள்ளத்தையும், சிலந்திக்கூடு வினைத்திட்பத்தையும், எறும்பின் வரிசை ஒழுங் கினையும், பால்கறக்கும் பசு தனக்கென வாழாமையையும், குஞ்சு காக்கும் கோழி குடும்பக் காப்பினையும், தாவும் குரங்கு மலையாமையையும், ஆடும்பாம்பு இன்னா இனிமையையும், மரஞ்சேர் கொடி பற்றுக்கோடாதலையும், நாய்ப்பூசல் இனம் அடித்துக் கொள்ளாமையையும் காண்பார்க்குக் கற்பித்தன என்றோ. இவற்றைக் காண்பவர் தம் நெஞ்சத்து எண்ணினர் என்றோ, பழந்தமிழ்ப் புலவர்கள் புறத்திணைப் பகுதிகளில் பாடியிருக்கலாமே, இன்ன. வாழ்வெண்ணங்கள் இயற்கையினால் தமிழர்க்கு முகிழ்த்ததில்லை. ஏழுதிணைகளும் எண்ணிறந்த துறைகளும் கொண்டபுற விலக்கியத்தில் தினை துறைக்கேற்ற இயற்கையைப் பாடாமைக்கு பாடவேண்டாமைக்குக் காரணம் இதுவென அறிக. புறத்திணைச் செய்யுட்களில் பொருட்கு உரிய இயற்கைப் புனைவு இல்லை. இருப்பனவெல்லாம் இயற்கை யுவமைகள்; மக்கள் உணவாகவும் உடையாகவும் பிறவாகவும் வாழ்க்கையிற் பயன்கொண்ட இயற்கைப் பொருள்கள். எனவே தமிழ்ச் சமுதாய வழக்கவொழுக்கங்களைக் காட்டுதற்கும், உவமைகள் கூறுதற்குமே புறத்திணைப் புலவர்கள் இயற்கையைக் கையாண்டனர் என்று அறியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/174&oldid=1238513" இலிருந்து மீள்விக்கப்பட்டது