பக்கம்:தமிழ்க் காதல்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக் குறிக்கோள்

197



“உருவென்னைக் காட்டி அளியள்” என்று வெளிப்படுத்துகின்றான்; அன்று சென்றவள் அப்படியே மறைந்துவிட்டாள். அவளைத் தலைப்படுதல் எப்படி என்று புலம்புகின்றான்.

ஏன் அவள் திரும்ப வரவில்லை? நடந்த இடையூறு என்ன? முதல்நாள் கூட்டுறவிற்குப்பின், மகள் செய்கையை ஐயுற்று பெற்றோர்கள் அவள் சிறிதும் வெளியே செல்லாவாறு தடுத்துவிட்டனர். அவள் முற்றும் இற்செறிக்கப்பட்டாள். தலைவி புனத்திற்கும் ஆடிடத்திற்கும் வந்தாலன்றோ பிறகூட்டங்கள் நிகழும்? தோழியின் உறவு ஏற்படும்? பெற்றோர் ஒவ்வா விடினும் உடன்போக்கிற்கு வழியுண்டு. காதலியை மீண்டும் ஒருமுறைகூடக் காணும் வாய்ப்பில்லாக் காதலனுக்குக் கவற்சி பெரிதாயிற்று. மடலேற்றம் பற்றிய நீான்கு கலிகளையும் ஆராயின், காதலுக்கே நிற்பவர் தலைவியின் பெற்றோர்கள் என்பதும், அவர்களை வணக்குதற்கே தலைவன் களவில் தன் உள்ளம் கவர்ந்தாளை ஊரறிய வெளிப்படுத்துவான் என்பதும் தெளியலாம். மடலேற்றம் கண்ட : ஊர்மக்கள், மகள் இசையும் போது பெற்றோர் குறுக்கிடல் பொருந்தாது, இவன் காதலை இனியும் சோதித்தல் ஆகாது என்று கருத்துரைப்பர். இவன் காதலிப்பவள் தானும் இவனைக் காதலிப்பவளே. இஃது அன்புடைக் காமம் என்று சான்றோர் நெறி பகர்வர். மகளும் ஊராரும் சான்றோரும் ஒப்பும்போது, தலைவனும் விடாக் காதலனாக இருக்கும்போது, பெண் பெற்றோர் என்செய்வர்? தாம் விரும்பாவிடினும் அவளை அவனுக்கு மன்னஞ் செய்வர்.

வருந்தமா ஊர்ந்து மறுகின்கட் பாடத்
திருந்திழைக் கொத்த கிளவிகேட் டாங்கே
பொருந்தாதார் போர்வல் வழுதிக்கு அருந்திறை

போலக் கொடுத்தார் தமர் (கலி. 141)

பெருந்திணைத் தன்மையைக் கசடறக் கற்பிக்கும் ஒரு பாடல் இது. கண்டவர்க்கு இரக்கம் தோன்றும்படி, தலைவன் மடற்குதிரை ஏறினான்; தெருவிலே தன் காதலைப் பாடினான்; பெண்ணுக்குப் பொருத்தமான சொற்களைச் சொன்னான். அதனைக் கேட்ட அவள் சுற்றத்தார் (பெற்றோர்) பாண்டியனுக்கு அஞ்சிப் பகைவர்கள் திறை கொடுப்பதுபோல, மடலேறியவனுக்கு அவனை மணஞ்செய்து கொடுத்தனர் என்ற கருத்தால், அறியலாகும் பெருந்திணைப் பகுதிகளை நினைமின். 'வருந்த என்பதனால், ஊரார் மடலேறியவன் பக்கம் சார்ந்தனர் என்பது பெறப்படும். 'திருந்திழைக்கு ஒத்த கிளவி என்பதனால், மகளும் இவனைக் காதலிக்கின்றாள் என்பது பெறப்படும். 'பொருந்தாதார்’ என்ற சொல்லினாலும் உவமை யினாலும், இக்காதலுறவிற்குப் பெற்றோர்கள் மனம் பொருந்த வில்லை என்பதும், வேறு என் செய்வது என்று கருதித் திறைபோல மகளைக் கட்டாயத்திற்காகக் கொடுத்தார்கள் என்பதும்பெறப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/210&oldid=1395812" இலிருந்து மீள்விக்கப்பட்டது