பக்கம்:தமிழ்க் காதல்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகத்திணை குறிக்கோள்

205



புறவணி நாடன் காதல் மடமகள் .
ஒண்ணுதல் பசப்ப நீசெவின் தெண்ணீர்ப்
போதவிழ் தாமரை யன்னநின்
காதலம் புதல்வன் அழுமினி முலைக்கே (ஐங். 424)

நீ பிரிந்தால் குழந்தை பாலுக்கு அழும் என்று சுருக்கமாகக் கூறுகின்றாள் தோழி. நீ பிரிவையாயின் தலைவி உயிர் விடுவாள், குழந்தையும் பாலின்றி இறக்கும் என்பது குறிப்பு. தாய்நிலை எய்திய மனைவியின் உள்ளம் இதுவாயின், புதுமணப் பெண்ணை ஒருவன் பிரிதல் கொடிதினும் கொடிது. திருமணங் கொண்டவுடன் கடமைகள் வந்துவிடுகின்றன' என்றாலும், அவற்றைப் பலநாள் மனைவியொடு உடனிருந்து ஆற்றுவதே இல்லறமாம்.

இளமனைவியின் பெருந்திணைக்காமத்தை, தேறுதற்குரிய மிகு காமத்தைக் குற்றமாகவும் பழியாகவும் தமிழ்ச்சமுதாயம் கருதவில்லைகாண். காம வேட்கையை அரைகுறையாகத் தணித்துப் பிரியும் போக்கைத்தான் குற்றமாகக் கருதிற்று. 'எல்லா, நீ உற்ற வருத்தம் என்ன? யார் இது செய்தார்?' என்று பரிவோடு வினவியது. பிரிந்த தலைவன் இயல்பாகவே வீடுவந்துசேர்ந்தான். மனைவியின் துயரச்செய்தியைப் பலர் வாய்க் கேட்டு வந்தான் என்றும் கொள்ளலாம், காதலியின் நோவையும் அழுகையையும் பெரு மூச்சையும் இரவுபகல் உறக்கமின்மையையும் கண்ட காதலன் அவளை நெருங்கிப் புல்லி ஆரத்தழுவினான். தேற்றா விதை கொண்டு தெளிந்தபின் கலங்கியுள்ள நீர் தெளிவடைவது போல, நல்லெழில் மார்பனை அணைந்து காமக்கலக்கம் நீங்கி அறிவுநலம் பெற்றாள் (கலி. 142) காம மருள் கொண்ட இளநங்கை இழந்த நலத்தையும் புன்முறுவலையும் மீண்டும் எய்தினாள் (கலி 143) அவளது நுதற் பசலை மறைந்தது. அறிவிலார். சொல்லிய சில பழியெல்லாம் பொய்யாயின. (கலி, 144) . .. . .

பாயல்கொண் டுள்ளா தவரை வரக்கண்டு
மாயவன் மார்பில் திருப்போல் பவள்சேர
ஞாயிற்று முன்னர் இருள்போல மாய்ந்ததென்
ஆயிழை யுற்ற துயர் .. . (கலி. 145)

தூக்கத்தைக் கெடுத்துப் போனவன் திரும்பிவரக் கண்டதும், மரு வுற்ற மங்கை அவன் மார்பைத் தழுவிக் கொண்டனள், பெரிய ஒளிப்பிழம்பாகிய கதிரவன் முன் இருளுக்குச் சிறிய ஒதுக்கிடமும் உண்டோ ?. அவனை அணைந்ததும் அவள் துயர் பறந்தோடிற்று. பித்துக்கொண்ட சுவடும் இல்லை. முன்னைய நன்னிலை பெற்றனள். இவ்வுலவிற்குத் திருமால் மார்பை அகலாது ஒன்றி உறையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/218&oldid=1238925" இலிருந்து மீள்விக்கப்பட்டது