பக்கம்:தமிழ்க் காதல்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

தமிழ்க் காதல்



இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை (தொல். 1037)

என்று பாராட்டினார் தொல்காப்பியர். கைக்கிளை இளைஞன் அன்புட்ையனாயினும், அவன் காதலித்தாளிடத்து அன்பு தோன்ற இடமின்மையின், இவனது அன்பு கிளையாது ஒடுங்கி விடும். பெருந்திணைக் காதலர்கள் ஒத்த அன்பினராயினும் அன்பிலர் போல அன்னவர் செயல்கள் காட்டும். ஐந்திண்ைக் காதலர்கள் ஒத்த அன்பிற்கு ஏற்ப ஒத்த காதற் செயல்களையே போற்றுதலின், அன்னோர்தம் வாழ்க்கை எஞ்ஞான்றும் ஒருசீராக விளங்கும். யாண்டும் அன்புக்கு இயைந்தனவே செய்தலின், 'அன்பொடு புணர்ந்த' என்று ஐந்திணைக்கு அடை புணர்த்தினார். ஐந்திணை மாந்தர் இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்தலின், இன்பமும் பொருளும் அறனும் ஆண்டு உள என்று நெறி காட்டினார். ஆங்கிலப் பேராசிரியர் ஆர்போர்டு, செகப்பிரியர் நாட்கங்களில் வரும் காதற் கூறுகளையும் மணவகைகளையும் பற்றிச் செய்த அரியதோர் ஆராய்ச்சிக் கட்டுரையைக் கற்றேன். அகத்திணையின் காதற் பாங்குகளை ஒப்பிட்டும் உறழ்ந்திட்டும் கண்டறிதற்கு இக்கட்டுரை என்னை ஊக்கலாயிற்று. அவர் வடித்துக்காட்டும் செகப்பிரியக் காதல் அமைப்பாவது: "காதலாவது நெஞ்சு அறிவு புலன்கள் என்ற அனைத்தையும் ஒருங்கே தூண்டிவிடும் ஒரு பெரும் வேட்கை. காதலுணர்ச்சி அவாவுடையதன்று, ஆர்வமுடையது: மேலெழுந்தவாரியன்று, மெல்லியது; துறவுடையதன்று, துயது; ஆசாரமுடையதன்று, அறமுடையது; விளையாட்டுத்தனமன்று, மகிழ்ச்சி. மிக்கது; வெடுக்குத்தனமன்று, மலர்ச்சி நிறைந்தது; செகப்பிரியர் பாடும் காதல் மாந்தர்கள் திருமண ஆவலுடை யவர்கள். உரிமை நாட்டமோ அன்புமாற்றமோ அன்னவர்பால் இல்லை. அன்னவர்க்கு முதற்காத்லே முழுக்காதலாகும்” செகப்பிரியர் உணர்ந்த இக்காதவியல் தொல்காப்பியரும் சங்கச்சான்றோரும் போற்றிப் புனைந்த ஐந்தினைமைக்கு ஒருவாறு ஒப்பாகும், நாடக வனப்பு நோக்கி இக்காதல் இயலுக்கு மாறான காதற் கூறுகளும் செகப்பிரியன் நாடகங்களில் இடம் பெற்றுள என்பர் ஆர்போர், நம் ஐந்திணைக்கண்ணோ இயல்பிற்குப்புறம்பு எச் சிறுவளவும் நுழைதற்கில்லை. புறநடை புகாக் காதற்பண்பு கொண்டது தமிழ் ஐந்திணை. விதிக்கு மயிரிழை அன்ன ஊறுபாடு ஏற்படினும் ஒரு செய்யுள் ஐந்திணையாகாதெனத் தள்ளப்படும். கைக்கிளை பெருந்திணை ஐந்தினை என்ற முப்பாற்பட்ட அகத்திணை பொருளானும் வரம்புடையது, அப்பொருளைச் சொல்லும் முறையானும் வரம்புடையது. இவ்வரம்பே வரம்பு. இவ்வரம்பிற்கு மேல் வரம்பில்லை. சுருங்கச் சொல்லின், அகவரம்பு பெண்ணின் கற்புப் போலத் திண்மையும் மாட்சியும் வாய்ந்தது. 1. Shakespears's Treatment of Love and Marriage, p.1 !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/227&oldid=1400295" இலிருந்து மீள்விக்கப்பட்டது