பக்கம்:தமிழ்க் காதல்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக் குறிக்கோள்

215



ஐந்திணையின் பொருள் வரம்பு

ஐந்தினைத் துறைகளைக் கூர்த்து மதிப்பின் ஆண்டுவரும் காதலொழுக்கங்கள் அரியனவல்ல, யாவரும் கொள்ளத் தக்க எளியன; வலியனவல்ல, உடலையும் உளத்தையும் ஊறு செய்யா மெல்லியன கொடியனவல்ல, வாழ்வுக்கு நலம் பெருக்கும் இனியன: சிறுமையல்ல, சமுதாயம் போற்றும் சால்பின. ஆண்டு வரும் துறை ஒவ்வொன்றனையும் கற்பனையால் விரிக்கலாம்; விரிக்கப்புகின் பெருந்துன்பியலாகவோ, பேரின்பியலாகவோ நீளும். அதிர்ச்சிதரும் சிறுகதையாகவோ பெரும் புதினமாகவோ மாறும் அறநெறிக்கு உட்பட்டோ கடந்தோ செல்லும், ஒரிளைஞன் பால்வயப்பட்டு நங்கையைக் காதலித்தான். அவனது பெற்றோர் அக்காதலுக்கு இசையவில்லை என்று அறிந்தபின், கண்ணுற்ற காதலியைக் கைவிட்டான் என்று கூறலாகாதா? அல்லது அழகும் செல்வமும் மிக்க மற்றொரு மங்கையைக் கண்டதும், முதற் காதலியை யானும் நீயும் எவ்வழி அறிதும் என்று கேட்டான் எனக் கூறலாகாதா? ஒரு தலைவன் தோழி துணையாகத் தலைவியை அடைய முயல்கின்றான். பகற்குறியிலும் இரவுக்குறியிலும் தோழியைத் தனித்துக் காண்கின்றான். இந்நிலையில் இளந்தோழியொடு தலைவனுக்கு நட்பு ஏற்பட்டு விட்டது எனவும், பழந்தலைவி பகையானாள் எனவும் கதைய்ை மாற்றலாமன்றோ? தோழியிற் கூட்டம் என்பதற்கே, நினைத்தால் ஒரு புதுப்பொருள் ஊட்டி விடலாம் அன்றோ? இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர், தலைவன் பாங்கனைக் காண்கின்றான்; தான்பட்ட துயரைப்புலம்புகின்றான். அவன் சொற்படி பாங்கன் தலைமகளைச் சென்று காணுகையில் இருவரும் மாறிப் புக்கார் என்று கற்பிக்கலாம். பாங்கற்கூட்டம் என்பதற்கு மாறு பொருள் செய்யலாம். தல்ைவனது தோழனுக்கு தலைவியது தோழிக்குமே உறவு முடிச்சிட்டுத் தலைக்கதையுள் கிளைக்கதை பெருக்கலாம். தலைவன் தலைவி பாங்கன் பாங்கி என்ற நால்வகை மாந்தர் தம்முள் ஐயமும் பூசலும் பொறாமையும் சூழ்ச்சியும் காட்டி ஐந்திணைத்துறைகளை அகலக் கதையாக்கி எண்சுவைப்படுத்தலாம். இரவுக் குறிகளில் காதலர்கள் வருவதையும் போவதையும் உற்றறிந்த ஒரு கீழ்மகன் ஒருநாள் வழியிடைத் தலைவனைத் தாக்கினான்; தாக்கியபின் இரவுக் களத்துக் காதலனை எதிர்நோக்கியிருக்கும் தலைவியை அணுகிக் கைப்பற்றினான்; அது செய்யுங்காலை, தாக்குண்ட தலைவன் விரைவில் வந்து கீழ் மகனை வதைத்துத் தலைவியைக் காப்பாற்றிக் கவவினான் என்றெல்லாம், இரவுப் புணர்ச்சியை விரிக்கலாம். இத்தகைய கருத்துத் தொடுப்புகள் பொதுவாக இலக்கியத்துப் பயில்வன்வே. எனினும், அவ்விலக்கியம் அகவிலக்கியம் ஆகாது. இன்ன கருத்தோட்டங்கள் அகத்திணைக்கு முற்றும் புறம்பானவை. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/228&oldid=1400296" இலிருந்து மீள்விக்கப்பட்டது