பக்கம்:தமிழ்க் காதல்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

தமிழ்க் காதல்


அகத்திணைக்கண் துன்பியல் போல்வது ஒன்று உண்டெனின் அது பாலைத்தினையே எனவும். நீரற்ற மணலும் அன்பற்ற மறவர்களும் கிடக்கும் நெடுஞ்சுரத்தில் தலைவன் செல்வது பிரிந்திருக்கும் இல்லத் தலைவிக்கு உயிரலைக்கும் துன்பத்தைத் தரும் எனவும். இவ்வளவு தவிரத் துன்பமாக முடிவது அகவிலக்கியத்தில் விலக்கப் பட்டது எனவும் பேராசிரியர் சீனிவாச அய்யங்கார் குறிப்பதை ஒப்பு நோக்குக!

ஐந்திணைக் காலம்

மக்கள் வாழ்க்கையில் ஒரு கால எல்லைக்குள் நிகழும் காதல் ஒழுகலாறுகளையே ஐந்திணை புனைய முற்படுகின்றது. பிறப்பு முதல் இறப்புவரை, குழமைமுதல் முதுமைவரை எல்லாவற்றையும் அது சொல்ல முற்படுவதில்லை. உள்ளத்தாலும் உடலாலும் பாலின்பம் துய்க்கவல்ல இருவர்தம் பருவத் தொடக்கம் ஐந்தினைத் தொடக்கமாகும். குமரமைக்கு முன்னிலை ஐந்திணைக்குப் பொருளன்று. பருவம் வாய்ந்த இருவர்தம் காமவுறவே அகத்திணைக்குப் பொருள் என்க. இளமைக்குப் பின்னிலையும் ஐந்திணைக்குப் பொருளில்லை. காதலர்கள் முதுமைக் காலத்து எப்படி வாழ்க்கை நடத்தவேண்டும் என்று கூறுவது அகவிலக் கியத்தின் கடனில்லை. இளமை வாரா முன்னும் ஐந்திணைக்குப் பேச்சுரிமை யில்லை.இளமை நின்றொழிந்த பின்னும் அதற்கு அவ்வுரிமை யில்லை. இளமைக் காலமே ஐந்திணைக் காலமாகும்; ஏன்? ஐந்திணையாவது காமம்துதலுவது, புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்ற காமவினைகளைக் கொண்டது. ஒவ்வொரு வகை இலக்கியத்திற்கும் பொருள் வரம்பு உண்டு. ஐந்திணை யிலக்கியத்திற்கு காமக் காலமே, அக்காலச் செவ்வியில் தோன்றும் காதல் வினைகளே பொருளாம்.

ஐந்திணையாவது உள்ளப் புணர்ச்சியும் உடற் புணர்ச்சியும் இரண்டறக் கலந்த ஒருயிர்ப் புணர்ச்சியாகும். இவ்வடிப் படையில் ஐந்திணை நூற்பாக்களுக்கும் செய்யுட்களுக்கும் பொருள் கான வேண்டும். காமம் நிலையாது, மெய்யுறுபுணர்ச்சி தீது, துறவு மேற்கொள்ளாமல் நெடிது இன்பம் துய்த்தல் அறமாகாது என்ற கோட்பாடுகளை ஐந்திணைக்கண், அகத்திணைக்கண் காண முயலுதல் ஆண்வயிற்றில் கருக்காண்பதை ஒக்கும்.

காமத்தால் பயனின்மையை அறிவுறுத்தவே அகத்திணையை வகுத்தார் தொல்காப்பியர் என்று உரையாசிரியர் இளம்பூரணர் பொருளாதிகாரத்தின் முன்னுரையில் வலியுறுத்துவர். நூலாசிரியனது கருத்தை உரையாசிரியன் உணரவில்லை

1. History of the Tamils, p.67.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/233&oldid=1400303" இலிருந்து மீள்விக்கப்பட்டது