பக்கம்:தமிழ்க் காதல்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக் குறிக்கோள்

225


பாடற்கு ஒர் உரிப்பொருள் என்ற மரபில் அமைந்தன. அகவிலக்கியத்துள் பட்டினப்பாலைதான் 301 அடி பொருந்திய பெருநெடும் பாட்டாகும். தலைவன் செலவழுங்கல் என்பது இதன் துறை.

முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும்
வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய
வாரேன் வாழிய நெஞ்சே (218–20)

வேலினும் வெய்ய கான மவன்
கோலினும் தண்ணி தடமென் தோளே (300–1)

என்னும் அடிகள் ஐந்தே துறைக்குப் பொருந்திய அடிகள், பிறவெல்லாம் காவிரிப்பூம்பட்டினத்தின் வளத்தையும் திருமா வளவனின் மறத்தையும் புகழ்வன. இதனால் அகத்திணைப் பாடல் பார்வைக்கு நீண்டிருப்பினும், ஒருதுறைக்கு அடங்கி ஒரளவு விரிவுக்கே இடங்கொடுக்கும் மென் காதலுடையது என்று தெளியலாம்.

பிற தொகைகள் போலாது, ஐங்குறு நூறும் கலித்தொகையும் மிகச் சிலரால் பாடப்பட்டவை. ஒவ்வொரு திணையையும் பாடினோர் வெவ்வேறாவர். கலித்தொகையில் நெய்தற்றிணைக்கு நல்லந்துவனார் ஆசிரியர். இவர் 33 செய்யுட்கள் அல்லது 1032 அடிகள் தொடர்ந்து யாத்துள்ளார். ஐங்குறு நூற்றில் பாலைத்திணைக்கு ஒதலாந்தையார் ஆசிரியர். இவர் நூறு ஆசிரியச் செய்யுட்கள் அல்லது 451 அடிகள் ஒருங்கேவரப் பாடியுள்ளார். இங்ங்னம் பாக்கள் பலவும் வரிசையாகத் தொடுத்த புலவர்கள்கூட அகப்பொருளைத் துறைவரிசையாக எழுத நினைக்கவில்லை.' களவும் கற்பும் அவற்றின் துறைகளும் முன்னும் பின்னும் மாறிவரக் காணலாம். பாலை பாடிய பெருங்கடுங்கோவும், குறிஞ்சி பாடிய கபிலனும், மருதம் பாடிய இளநாகனும், முல்லை பாடிய நல்லுருத்திரனும், நெய்தல் பாடிய நல்லந்துவனும் இன்ன சிலரும் ஒரு திணை வல்லுநர்கள். வெறி பாடிய காமக்கண்ணியார், மடல் பாடிய மாதங்கீரனார், மகட்போக்கிய செவிலித்தாய் பாடிய கயமனார் என்போர் ஒருதுறை வல்லுநர்கள். இங்ங்னம் ஒருதினை ஒருதுறை வல்ல புலவர்கள் சங்க காலத்து இருந்தனரேயன்றி முற்றும் அகத்திணை ஐந்திணை பாடிய புலவர் என்போர் அக்காலத்து இலர். அதற்குக் காரணம் அகத்திணை நிரல்பட நிகழ்ச்சிகளைப் பாடத்தக்க ஒரு பேரிலக்கிய அமைப்புடையது அன்று என்பதுவே. ஏறக்குறைய இருநூறு பாடல்கள் யாத்த பெரும்புலவர் கபிலர் கூடத் தொடர்நிலைச் செய்யுட்களாகத் துறைகளை எழுதிலர் என்பது நினையத்தகும்.


1. ஒ.நோ. வேங்கடராசுலு ரெட்டியார் கபிலர், 81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/238&oldid=1400342" இலிருந்து மீள்விக்கப்பட்டது