பக்கம்:தமிழ்க் காதல்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


1. அகத்திணை ஆராய்ச்சி


சங்க இலக்கியமும் அகத்திணையும் (காதலும்) என்பது யான் ஆராயக்கொண்ட ஆய்பொருள். சங்க இலக்கியமாவது எட்டுத் தொகையும் பத்துப்பாட்டுமேயாம். இது பலர் ஒப்பிய முடிபு. இப்பதி னெட்டுந்தாம் காலக்கூற்றுவனின் தமிழ்ப் பசிக்கு இரையாகாது, தப்பி வந்த பழந்தமிழ் இலக்கியப் படைப்புக்கள். சங்கத் தனிப்பாடல்களின் தொகை 2381 என்ப; அதனுள் அகத்திணை நுதலியவை 1862 என்க. சங்கப் புலவர் தொகை 473 என்ப; அதனுள் அகம் பாடினோர் 373 சான்றோர் என்க.

அகம் புறம் என்னும் இருதிணை வடிவமைந்த பொருளிலக்கியம் இன்றும் அறிவுலகிற்குப் புதியது, தமிழ்மொழி ஒன்றின் கண்ணே தான் காணப்படுவது என்று பன்மொழியறிஞர்கள் செவ்வனம் மொழிகுவர். தமிழர் இலக்கண வடிவு கொடுத்த இருதிணையுள்ளும், ஆராயுங்காலைச் சிறந்து நிற்பது எது? புறத்திணைப் பொருளான வீரம் மக்களுள்ளும் சிலர்க்கே தகுவது; "நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே (புறம்.312)”[1] என்றபடி, படைப்பயிற்சியால் வருவது. அகத்திணைக்குப் பொருளான காமமோ ஆண் பெண் என்னும் பால்வாய்ந்த உயர்திணை அஃறிணை உயிர்க்கெல்லாம் பொதுவாயது;


  1. 1. சங்க இலக்கியம்; முன்னுரை, ப XVI; சமாசப் பதிப்பு
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/27&oldid=1244756" இலிருந்து மீள்விக்கப்பட்டது