பக்கம்:தமிழ்க் காதல்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

தமிழ்க் காதல்


அறிவுறுத்துவது? பலர் தம் பயில்வுகளை எவ்வாறு அறிவது? ஒவ்வொருவரும் தம் பயில்வுகளை எங்ங்னம் பிறர்க்கு உய்ப்பது? இதற்குத் தமிழினம் கண்டநெறிதான் அகப்பாட்டு பெயர் அடுத்தல் ஆகாது என்னும் அகவிலக்கணம். அகத்திணை மாந்தர்கள் பெயரிலிகள். அகக்காதல் பெயர்ப்படா. பெயர்ப்படுத்தல் கூடாது தூயநிலையுடையது என்று ஒப்பரிய இலக்கணவேலி கட்டினர் அகத்தினை யறிஞர்கள். பிரியாது அவ்வேலியை எல்லோரும் காத்தனர். உரிப்பொருளை யாரொருவர் பெயரோடும் இணைக்கலாகாது என்பது புறநடையற்ற விதியாதலின், பாடிய புலவனோடும் இணைக்கலாகாது என்பது வெளிப்படை. இவ்வேலிக் காப்பினால், எந்நிலையினர் தம் காதல் நுகர்வுகளும் கல்விகளும் அறிவுகளும் கற்பனைகளும் காட்சிகளும் சொற்களும் சமுதாயப் பொதுமையாகும் வழி ஏற்பட்டது. பெண்களும் ஆண்களும் நாணொடு அகத்துறை பாட முன் வந்தனர். புறத்திணையினும் அகத்திணை பாடப் பலர் விழைந்தனர். 2381 சங்கப் பாடல்களில் அகத்துறைப் பாட்டுக்கள் 1862, 473 சங்கப் புலவர்கள் 378 புலவர் அகம்பாடினவர் என்றால், இத் தொகைப் பெருக்கத்திற்குப் பெயர் சுட்டா இலக்கண வேலியே காரணமாகும் என்று அறிக. நான் சொன்னேன் என்று சொல்லாதீர்கள், என் பெயரை வெளிப்படுத்தாதீர்கள் என்று கேட்டுக் கொண்டு, உண்மையைப் புலப்படுத்தப் பலர் முன்வர வில்லையா? இவ்வுலகியல் வழக்கோடு அக விலக்கிய வழக்கை ஒத்துக் காண்க.

அகம் என்னும் சொல்லின் பொருள்

அகத்திணை என்ற தொடரில் ‘அகம்' என்னும் சொல்லுக்கு இயல்பான பொருள் வீடு என்பது. “அகம் புகல் மரபின் வாயில்கள்” என்பது தொல்காப்பியம் (1097). வீடு அல்லது குடும்பம் ஆகும் காதலே அகத்திணை நுதலுவது. அகத்தினை மாந்தரெல்லாம் ஒரு வீட்டுறுப்பினர்களே. ஆதலின் அகம் என்னும் சொல் வீடு என்பதனையே முதலாவதாகக் குறிக்கும். எனினும் இல், மனைவி, வீடு என்ற பல சொற்கள் இருக்கவும், இச்சொல்லைக் குறியீடாகத் தேர்ந்தெடுத்தது ஏன்? அகத்திணை சங்கப் படைப்பு என்று முன்னர் அறிந்தோம். சங்கத்தார் தாம் வடித்த புதிய காதல் இலக்கியத்தின் கூறுகள் எல்லாம் தோன்றத் தக்கதொரு சொல்லை ஆராய்ந்தனர். காதலர் தம் உள்ளப் புணர்ச்சி அவ்விலக்கியத்தின் உயிர்க்கூறு. உள்ளம் என்னும் பொருளும் அகச் சொல்லுக்கு இயல்பாக இருத்தலின், அகத்திணை என்று இலக்கியக் குறியீடு வைத்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/281&oldid=1394539" இலிருந்து மீள்விக்கப்பட்டது