பக்கம்:தமிழ்க் காதல்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

தமிழ்க் காதல்


மயங்கி யானை ஒடும். உண்மையில் வழியச்சம் இல்லை; இரவுக்குறி வருக என்று தெளிவாகச் சொல்லுவள் குறுவழுதிப் புலவரின் தோழி (அகம். 228) ஐய, எம் சிற்றுார்க்கு இரவு வருகதில், மலையெனி; குவிந்து கிடக்கும் மணல் மேட்டிற்குப் பக்கத்தே நின் வண்டியை நிறுத்தலாம். களவு வெளிப்படாது என்று தலைவனுக்குச் செயல்முறை கற்பிப்பள் (குறுந் 345). தோழியின் துணிவும் தலைவியின் விழைவும் இவர்தம் பாடற் பண்புகள்.

2. அம்மூவனார்

127 அகச் செய்யுட்களின் ஆசிரியராகிய, அம்மூவனார் அகத்தினைப் பாட்டெண்ணிக்கையில் இரண்டாமவராக இலங்குபவர். 'புறந் தொழா மாந்தர்' என்பதுபோல, இவர் புறப் பாட்டு யாதும் பாடியதில்லை. வரலாற்றுக் குறிப்பு இவர் பாடல்களில் சாலச் சிறிது. களவில் கற்பில் பலதுறை பற்றியும் பல மாந்தர்கள் பற்றியும் பாடலாக்கிய விரிவுச் சிறப்பு உடையர் அம்மூவனார். அகநானூறு நற்றினை குறுந்தொகை ஐங்குறுநூறு என்ற சங்க அகத்தொகை நான்கே. இந்நான்கினும் இவர் பாடல்கள் தொகுக்கப் பெற்றுள என்பதும் ஒரு சிறப்பு.

களவுப் பாடல் 82
கற்புப் பாடல் 45
தலைவி கூற்று 56
தோழி கூற்று 43
தலைவன் கூற்று 17
பரத்தை கூற்று 10
நற்றாய் கூற்று 1

இலக்கிய வழிகாட்டி

பிற்கால இலக்கியங்கட்குப் பல புதுவழி திறந்தவர். அம்மூவனார். அகத்தினை நிகழ்ச்சிகள் கோவையாக நிரல் படத் தொடுக்கப்படும் பெற்றியதன்று என முன்னர் விரிவாகக் கண்டோம். இவ்வடிப்படை இலக்கணத்திற்கு இவர்தம் ஐங்குறு நூற்றின் தொண்டிப்பத்து (171-80) பெருமுரணாகும். இயற்கைப் புணர்ச்சி, பாங்கற் கூட்டம், தோழியிற் கூட்டம், இரந்துகுறையுறல், வரைவு கடாதல் என்று களவின் ஒழுகலாறுகளை ஒரு பத்துப்பாட்டில் தொடர்ச்சியாகக் கூறுவர். ஒவ்வொரு தலைப்பில் பப்பத்துப் பாடல் யாப்பது என்று நூல் அமைத்துக் கொண்டமையால், இவர்க்குக் களவுக் கோவை பாடும் எண்ணம் முளைத்தது போலும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/291&oldid=1394729" இலிருந்து மீள்விக்கப்பட்டது