பக்கம்:தமிழ்க் காதல்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296

தமிழ்க் காதல்



மகளுக்கு இல்லையே சொல்லியிருப்பின் உடன்போக வேண்டாவே என்று இரங்குகின்றாள். உடன்போதற்கு உரிய வயதோ அவளுக்கு? முடிமுடிக்க அறியாதவள் ஆயிற்றே என்று இளமையை நினைந்து புலம்புகின்றாள். என் பார்வைக்கு இனிய பாவை இது, என் பைங்கிளிக்கு இனிய பைங்கிளி இது என்று தொடர்புடைப் பொருளைப் பார்த்துப் பார்த்துக் கவல்கின்றாள். என் மகள் உடன்போவதற்குக் காரணம் யார்? அவளும் இல்லை, அவனும் இல்லை, நானும் இல்லை என்று ஊழை வெறுக்கின்றாள். தன் மகள் நடந்து செல்லும் பாலை வழி மழை பெய்து இனியதாகுக என்று வேண்டுகின்றாள். காக்கை கரைந்தால் விருந்து வரும் என்ற பொது நம்பிக்கை இற்றையார்க்குப் போலப் பண்டைத் தமிழர்க்கும் இருந்தது. ஆதலின், உடன்போகிய காளையும் கூந்தல் எழிலியும் வரும்படி கத்துவாய். காகமே! உனக்கும் உன் தற்றத்திற்கும் ஊனுடை உணவைப் பொற்கலத்தில் பட்ைப்பேன் என்று தாய் வேண்டுகின்றாள். சிலம்பு கழி நோன்பு அவன் வீட்டில் நிகழ்ந் தாலும்,திருமணம் தன் வீட்டில் நிகழவேண்டும் என ஒரு தாய் விழைகின்றாள். பெண்ணின் தாய்க்கும் ஆடவனது தாய்க்கும் எதிருணர்ச்சி இயல்பாகச் சமுதாயத்தில் இருப்பதை இன்றும் காணலாம். அகவிலக்கியத்தில் தலைவியினுடைய தாய் தந்தை இடம் பெறுவர்.தலைவனின் பெற்றோரைப் பற்றியும், அவளது கா தலொழுக்கத்தைக் குறித்து அன்னவர் யாது கருத்துடையர் என்பது பற்றியும் புலவர் வாய்வாளார்

நினைத்தொறும் கலிழும் இடும்பை எய்துக.
வெஞ்சுரம் என்மகள் உய்த்த
வம்பமை வல்லில் விடலை தாயே (ஐங். 373)

மையற விளங்கிய கழலடிப்

பொய்வல் காளையை ஈன்ற தாய்க்கே (ஐங். 399)

ஒதலாந்தையார் தலைவனது தாய்மேல் தலைவியின் தாய்க்குச் சினம் உண்டு என்று வெளிப்படுத்துவர். அவள் அத்தகையவனை அன்று பெற்றதனால் அன்றோ என் மகள் இன்று கடுஞ் சுரவழியில் செல்ல நேர்ந்தது என வளைத்துத் தொடுத்து வாயாடுவதைக் காண்க. மகள் உடன்போக்குத் துறையில் வைத்துத் தாயர்தம் எண்ணவோட்டங் களைப் பல திறமாக வடித்துக் காட்டுவர் புலவர், அதனால் அகவிலக்கியம் பாடுவார் பாடும் வன்மைக்கு இயைந்து விரியும் என்று அறியலாம். இருபால் தாயாரின் இகலுணர்ச்சி பாடு பெறுவதால், அகவிலக்கியம் தமிழ்ச் சமுதாய மனப்பான்மையோடு இயங்குவது என்றும் அறியலாம். தலைவனது தாய், கூற்றாகவன்றி, வைப்புத்தலம் போலப் பாட்டின் அகத்து வருதலின், அகமரபு புதிய மரபிற்கும் வழிவிடுவது என்றும் அறியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/309&oldid=1394749" இலிருந்து மீள்விக்கப்பட்டது