பக்கம்:தமிழ்க் காதல்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

297



12. ஓரம்போகியார்

ஐங்குறுநூற்றுப் புலவர் ஐவரில் ஒருவராகிய ஒரம்போகியார் 109 அகப்பாக்களின் ஆசிரியர், கபிலர், அம்மூவனாருக்கு அடுத்தபடியாகப் பாடலெண் மிகப் பாடியவர். களவொழுக்கச் செய்யுட்கள் 15, கற்பொழுக்கச் செய்யுட்கள் 94, தோழிக்கு 45, தலைவிக்கு 42, பரத்தைக்கு 12, தலைவனுக்கு 8, வாயில்கட்கு 1, பரத்தையின் தோழிக்கு 1 என்பன கூற்றுத் தொகைகள்.இவர்தம் களவுப்பாடல்களில் தலைவி கூற்று இடம் பெறவில்லை. -

பரத்தையின் தோழி

ஓரம்போகியார் மருதகப் புலவர். பரத்தைமைத் துறைகளை வகைவகையாகப் பாடியவர். சங்க விலக்கியத்தில் பரத்தையின் தோழிக்குப் பெரிதும் இடமில்லை. அத்தோழியைக் கேட்பவளாக வைத்துப் பரணர் பாடிய பாட்டு ஒன்று உண்டு (நற். 100). பரத்தை தன் தோழிக்குச் சொல்லியது என்ற துறையில் வைத்து ஒரம்போகியாரும் சில பாடல்கள் பாடியுள்ளனர். இவ்வளவில் பரணரும் ஓரம்போகியாரும் ஒப்பர்.

புதுப்புன லாடி யமர்த்த கண்ணள்
யார்மகள் இவளெனப் பற்றிய மகிழ்ந
யார்மக ளாயினும் அறியாய்

நீயார் மகனையெம் பற்றி யோயே (ஐங், 79)

இது பரத்தையின் தோழி கூற்று. இத்தோழி கூற்றாகப் பாடிய சங் கச்சான்றோர் ஓரம்போகியார் ஒருவரே. இவ்வகையால் கற்புக் கூற்றுக்கு உரியோர் எண்ணிக்கையில் ஒன்றைக் கூட்டிய பெருமை உடையவர் இப்புலவர். மரபுநிலை திரியாமல் அகத்திணையை வளர்க்கலாம் என்பதற்கு ஈண்டு ஒரு சான்று காண்க. தலைவியும் தோழியும் இணைபிரியா நண்பிகளாதலின், தலைவி நிலையில் தன்னை வைத்துத் தோழி பேசுவாள் என்பது இலக்கணம் தலைவித் தோழியின் இலக்கணத்தைப் பரத்தைத் தோழியின் நடையிலும் காணலாம். "நீயார் மகனை எம்பற்றி யோயே” என்று சொல்லும் போது, 'எம்' என்பது உண்மையில் பரத்தையைக் குறிக்கும் எனினும், அன்பின் ஒற்றுமைபற்றி அவளது தோழிதன்மைப்பன்மை நடையிற் கூறுவள்.

உள்ளுறை என்னும் இலக்கியக்கருவி மருதப்புலவர்க்கு இன்றியமையாதது. 50 பாடல்களுக்கு மேலாக உள்ளுறை அமைத்துள்ளார் ஒரம்போகியார். உள்ளுறை யுடைய பாட்டு மலரணிந்த கூந்தல் போன்றது; இலக்கிய அழகைமிகுப்பது இயற்கை வனப்பும் உவமைத் தன்மையும் உள்ளப்பதிவும் நாகரிப்பண்பும் புலமைக் கூர்மையும் உள்ளுறையால் விளங்கும். ஐங்குறுநூறு மூன்று முதல் ஆறடியுட்பட்ட சிறு செய்யுட்கள் கொண்ட தொகைநூல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/310&oldid=1394750" இலிருந்து மீள்விக்கப்பட்டது