பக்கம்:தமிழ்க் காதல்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

தமிழ்க் காதல்



ஆராக் காதல் அவிர்தளிர் பரப்பிப்
புலவர் புகழ்ந்த நாணில் பெருமரம்
நிலவரை யெல்லாம் நிழற்றி

அலரரும்பு ஊழ்ப்பவும் வாரா தோரே (அகம். 273)

அகத்திணைக் கருத்துக்களைக் கொண்டு செய்த மரவுருவகத்தை இப்பாட்டில் அறியலாம். கலங்கும் நெஞ்சம் நிலமாம். முலையை அணையப் பெறாத வேட்கை முளையாம். வேட்கையில் பருத்து வருத்தம் அடியாம்அவ்வருத்தத்தை அறிந்து பெண்கள் கும்பல் கும்பலாகப் பேசும் அம்பல்கள் விரிந்த கிளைகளாம். அவ்வம்பல் கேட்டுக் கேட்டுத் தழைக்கும் காதலுணர்வுகள் தளிர்களாம். மெல்ல முளைத்துப் பருத்து விரிந்து தழைத்த காமத்தின் காழ்ப்பால், அரிய நாணம் நீங்கித் தடித்த வாழ்வு பெரு மரமாம். அதன் நிழலில் ஊரார் எல்லாரும் கூடிக்கூடி வாய்மலர்ந்து பேசுவது விரிந்த அலர்களாம். இவ்வாறு அகத்திணைக் காதல் மரம் ஒன்றை ஒவியமாகக் காட்டிய இலக்கிய ஓவியர் ஒளவையார். அத்தகைய மலர்களைப் பறிக்க வரவில்லையே என்று காமங்காழ் காதலி ஏங்குகின்றாள்.

ஒளவையாரின் பல அகப்பாடல்கள் பெருந்திணைப்படுவன என்பது என் கருத்து. இத்திணையின் நான்கு துறைகளுள் ஒன்று “தேறுதல் ஒழித்த காமத்து மிகுதிறம்” என்பது. தலைவியின் காமம் ஒருகாலைக் கொருகால் பெருகிச் செல்வதன்றித் தணிவதில்லை. தோழி ஆற்றியும் அடங்குவதில்லை. ஊரெல்லாம் அறிந்து பேசும்படிக்கு அவள் காமம் வெளிப்படையாகும். புலவர் பெண்மையெனப் பாராட்டிய நாணம் அகலும், களவிலும் ஊரார் அலர் உண்டு. அவ்வலர் காதலர் தம் மறைவினாற் பிறப்பது; கற்புக்கு உறுதுணையாக எழுவது தலைவியின் நாணை ஊறுபடுத்தாதது. மேம்பாட்டிற் புனைந்த இல்லற அலரோ மனைவியின் காமவெளிப்படையால் தோன்றுவது, கற்பை ஊறுபடுத்தாமல், நானை நீக்குவது எனத் தெளிக. “பிரிவின்கண் தலைமகள் அறிவு மயங்கிச் சொல்லியது என இவ் வகப்பாட்டுக்கு எழுதிய துறையால்,பெருந்திணை என்ற நிலை பெறப்படு மன்றோ?

14. கடுவன் மள்ளனார்

இவர் புனைந்த அகப்பாக்கள் நான்கே எனினும், முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என நானிலத்துக்கும் ஒவ்வொரு பாடலாக அமைந்திருப்பக் காணலாம். தலையாலங் கானத்துப் போரில் நெடுஞ்செழியனது வீரர்கள் முழக்கிய ஆரவாரத்தினும் பெரியது. தலைவனது பரத்தைமையாற் பிறந்த அலர் என்று நக்கீரர் அரசியலுவமை கூறுவர் (அகம். 36). இவ்வகை அலருக்கு இவ்வகை உவமம் கூறுவது பலர்தம் மருதப்பாடல்களிற் காணத்தகு பொதுவழக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/315&oldid=1394757" இலிருந்து மீள்விக்கப்பட்டது