பக்கம்:தமிழ்க் காதல்.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

331


இரவுப் புணர்ச்சிக்குச் சூழ்நிலையைக் காட்டுவது இப் பாடல். தலைவி பல்வேறு பூக்களைக் கூடை கூடையாகக் கூந்தலில் வைத்துக்கொள்ளும் ஆசையுடையவள் என்பது நாளங்காடி என்ற உவமையால் விளங்கும். மெல்லிய இனிய உயரமான பூக்கட்டில்லின் கண் அமர்ந்திருந்து தலைவியின் மார்பணிகள் தழும்பு செய்யு மளவிற்கு விளக்கொளியில் அவளை முயங்குவோம் என்று திரும்பிவரும் தலைவன் இடைச்சுரத்தின் கண் எண்ணி மகிழ்கின்றான்; வீடு திரும்பும் காலம் மாலைக் காலம் ஆதலின், - இரவுக் கூட்டுறவை நினைக்கின்றான். புணர்ச்சியைப் பற்றி மொழியும் பாடல்கள் எத்துணையோ சங்கவிலக்கியத்து உள.நக்கீரர் பாடிய இவ்வொரு பாட்டிற்றான், காதலர்கள் விளக்கொளிமுன் கூடுவர் என்ற குறிப்பைக் கற்கின்றோம்"மென் பூஞ்சேக்கை நிவந்த பள்ளி நெடுஞ்சுடர் விளக்கம்” என வரும் அகப்பகுதியோடு,

குத்து விளக்கெரியக் கோட்டுக்காற் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி

என வரும் ஆண்டாள் பாசுரத்தை ஒப்பிடுக. ஒப்பிடுங்கால் சங்க , - விலக்கியத்தைச் சமயப் பாசுரத்தார் கற்று ஊறிக் கையாண்ட திறத்தை அறிந்து கொள்ளலாம்.

24. நல்லந்துவனார்

கலித்தொகை ஆசிரியர் ஐவருள் நல்லந்துவனார் ஒருவர். 33 செய்யுட்கள் கொண்ட நெய்தற்கலி இவர்தம் அறிவுப் பெரும் படைப்பாகும். அகநானூற்றில் ஒன்றும் நற்றிணையில் ஒன்றும் பரிபாடலில் இரண்டுமாக இவர்யாத்த அகங்கள் உள. காதலியின் இரங்கலைப் பாடுவதிலும், காம ஆராமையால் தோன்றும் கடந்த செயல்களைப் பாடுவதிலும் நிகரின்றி விளங்குவர் அந்துவனார். அம்மூவனாரும் உலோச்சனாரும் நெய்தல் பாடிய புலவர்கள் எனினும், நெய்தற் சூழ்நிலையில் அதற்குரிய பொருளாம் இரங்கலையே பாடியவரல்லர் அச்சூழ்நிலையில் வைத்துப் புணர்தல் முதலாம் பிற உரிகளையும் பாடியவர். அன்னவர்தம் செய்யுட்கள் முதல் கருப்பொருள்களால் நெய்தற்றிணையாகின்றன. நல்லந்துவனாரின் கலிகள் முதல் கருவுரி என்ற மூன்றானும் நெய்தல்கள். மேலும் சங்கப்புலவர் யார்க்கும் இல்லாத ஒரு தனிப் பெருமை அந்துவனார்க்கு உண்டு. இவர் ஒருவரே அகத்தினையுள் ஒரு பிரிவான பெருந்திணைக்கு இலக்கியம் செய்தவர். இவர்தம் கலிப்பா பத்தும் இல்லாவிடிலோ, பெருந் திணையின் தன்மைகளை எவ்வாறு அறிவோம்? தொல்காப்பியத்து வரும் பெருந்திணையின் இலக்கணவறிவோடு அமைய வேண்டியவர் களாவோம். அகத்திணைக் குறிக்கோள் என்னும் நான்காவது இயலில் பெருந் திணையியல்புகளை நுணுகி விரித்து விளக்குங்கால், உதவியாக இருந்தவை அந்துவனாரின் கலிப் பாடல்களே. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/344&oldid=1394802" இலிருந்து மீள்விக்கப்பட்டது