பக்கம்:தமிழ்க் காதல்.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334

தமிழ்க் காதல்


செய்கின்றவாம். தலைமகளின் மேனிச் சிதைவைக் காணமாட்டாது அவைகள் பொந்துக்குள் போய் விடுகின்றனவாம். போகாதிருந்தால், உங்கள் துறைமகன் செய்ததைக் காண் என்று தலைவி கேட்பின், நாணவேண்டுமன்றோ? தலைவன் நாணாமைக்கு நண்டுகள் நாணின என்று அஃறிணையை உயர்திணைப் படுத்துவர் அந்துவனார்.

களவுத் தலைவனுடைய உள்ளத்தை இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவன் வரைவை நீட்டிப்பானே யன்றி மறுக்கான்; மறுக்கும் உள்ளத்தானும் அல்லன். கடைசி வரை களவாகவே ஒழுகி இன்புற்றுத் தலைவியைக் கைவிட்டு விடுவான் என்பது பொருளன்று. அப்படி எண்ணிக்கொண்டு தோழி வரைவை நெருக்குகின்றாள் என்பது கருத்தன்று. அவன் திருமணங் கொள்வான் என்பதில் அவள் ஐயப்படாள். ஐயப்படுதலாக மொழிதல் அகத்திணையாகாது. ஊரலர் நோக்கியும், வழியச்சம் நோக்கியும், நொதுமலர் வரவுநோக்கியும், தலைவியின் பிரிவுத் துயர் நோக்கியும் வரைவை விரைந்து முடிக்க விரும்புவாள் என்பதுவே இலக்கணம். தலைவன் ஏன் நாட்கடத்த வேண்டும்? வரைதல் உறுதியாதலின் பின்னர்க் கிடைக்க இயலாத களவின்பம் என்னும் துணிவின்பத்தை நீட்டித்து நடத்திக்கொள்ள ஆர்வப்படுகின்றான். அலரையும் வழியையும் நொதுமலர் வரவையும் திருமணத்திற்குப் பேரிடையூறாக அவன் மதிக்கவில்லை. கொடுப்பது உறுதி என்ற கருத்தால், வள்ளல்கள் இரவலர்களையும் புலவர்களையும் தாழ்த்தி வைத்தல் உண்டன்றோ? காதலன் வரைவு நீட்டித்தல் வள்ளல் கொடை நீட்டிப்பதோடு ஒப்பது:- --

அதியமான் பரிசில் பெறுஉம் காலம்
நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்

கையகத் ததுவது பொய்யா காதே (புறம். 101)

நெய்தற்கலியில் தரவுப் பகுதிகளைக் காட்டிலும் தாழிசைப் பகுதிகள் இரங்கல் வளம் உடையவை. கற்புக்கு உரிய ஆறுகளில் நெடும் பிரிவுற்ற மனைவி மாலையைப் பழிக்கின்றாள்.வெள்ளத்தில் அடித்துச் செல்லும் மான்மேல் அம்புவிடும் கொடியார் உண்டோ? போரில், தோற்று வருந்துவாரை மேலும் நகுவார் உண்டோ? வெந்த புண்ணின் வாயில் வேல் நுழைப்பார் உண்டோ? மானைக் காக்கவேண்டும்; வருந்துவாரை ஆற்றவேண்டும்; புண்ணுக்கு மருந்தளிக்க வேண்டும். அவை செய்யா விட்டாலும் மேற் கெடுதல் செய்யலாமா? தலைவனது நீள்பிரிவுக்கு ஆழ்துயர் உறும் தலைவியை மேலும் அல்லற் படுத்துகின்றது மாலைக்காலம் என்று இரங்குவர் அந்துவனார். கூடினார்க்கு மேலும் வருந்தும் துன்பத்தைக் கொடுத்தலும் ஆகிய ஒரவஞ்சகம் கொண்டது மாலை என்பது நெய்தற் றலைவியின் கருத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/347&oldid=1394805" இலிருந்து மீள்விக்கப்பட்டது