பக்கம்:தமிழ்க் காதல்.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

358

தமிழ்க் காதல்


சொல்லுகின்றது. அவனது பரத்தையரின் தொகை ஒர் ஊரளவுக்கு இருக்கும். ("ஓரூர் தொக்கிருந்த நின்பெண்டிர்" கலி. 68) பல ஆறுகள் வந்து கலப்பினும் கடல் நிறையாதது போலப் பரத்தையர் பலரோடு உறவாடியும் அவன் மனத்துக்குக் காம நிறைவில்லை; நாளும் நாளும் புதுவோரை விரும்புபவன் எனத் தலைவனது தண்டாக் காமம் புனையப்படுகின்றது.

நீயே பெருநலத் தையே; அவனே
தண்கமழ் புதுமலர் ஊதும் -

வண்டென மொழிய மகனென் னாரே (நற். 390)

பரத்தத் தலைவனுக்குத் தலைவி ஆற்றாதபோது, ஆற்றுவிக்கும் தோழி பாட்டு இது. கணவன் நெஞ்சை ஒருவழி நிறுத்தும் ஆண்மகன் அல்லன், பொழுதுக்குப் பொழுது புதுமலர் நாடும் வண்டு போல்வன என்பதை எல்லோரும் அறிந்துள்ளனர். எல்லா நலமும் அழகும் வாய்ந்த நீ கவல வேண்டா. அவனது புறச்செலவுக்கு அவன் பண்புக்குறைவே காரணம் என்பது தோழியின் அமைதியுரை. “வண்டென மொழிப மகன் என்னாரே" என்ற ஓரடி போதும், தலைவனது தணியாப் பரத்தமையைக் காட்டுதற்கு.

தலைமகன் வண்டனையன் ஆகும்போது, நாணம் தங்குமா? சொற்சுருக்கம் இருக்குமா? சொல்லுருதி நிலைக்குமா? பரத்தைக் குறிகளொடு வீடு வருகின்றான்; அக்குறிக்குப் பொருளுரைக்கின்றான்: தலைவி ஏற்றுக்கொள்ள வேண்டி விருந்தினரை அழைக்கின்றான்; மகனைச் சுமந்து நுழைகின்றான்; பாணனையும் பாகனையும் தூதுவிடுகின்றான்.

நலத்தகை எழிலுண்கண் நல்லார்தம் கோதையால்
அலைத்தபுண் வடுக்காட்டி அன்பின்றி வரின்
கோடெழில் அகலல்குற் கொடியன்னார் முலைமூழ்கிப்
பாடழி சாந்தினன் பண்பின்றி வரின்
இனிப்புணர்ந்த எழில்நல்லார் இலங்கெயிறு உறாஅலன்

நனிச்சிவந்த வடுக்காட்டி நாணின்றி வரின்

வரைவில் மகளிர் மாலையால் அடித்த பசும்புண்ணோடும், அன்னவர் மார்பில் தோய்ந்த நறுஞ் சந்தனத்தோடும் ஒளிப்பற்கள் பதித்த செவ்வடுவோடும், அன்போ பண்போ நாணமோ இன்றிப் புறக்கோலம் குன்றாது மனைவிமுன் வந்து நிற்கின்றான் வாழ்க்கைக் கணவன். இது இளநாகனார் புனையும் கற்பியற்றலைவனது பண்பு.

அகப்புலமைத் திறன்

மேற்காட்டியவாறு களவுத்தலைவன் நனிநாணுடையன் ஆகவும், கற்புத்தலைவனைப் பெருநாணிலி ஆகவும் பண்பு முரண்பட இளநாகர் அகஞ்செய்வர். இங்ஙனம் வேற்றுத் தன்மை தோன்ற ஆட்பண்புகளை அமைப்பது இலக்கிய வழக்கு. ஒரு புலவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/371&oldid=1405617" இலிருந்து மீள்விக்கப்பட்டது