பக்கம்:தமிழ்க் காதல்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணை ஆராய்ச்சி

29


முந்நூற்றெழுபத்தெட்டு அகப்புலவோருள் முப்பதின்மர் தாம் இவ்வியலில் ஆராய்ச்சிப் பட்டனர். பலர் விலக்குண்டதற்கு என்ன முறையும் குறையும் கூறமுடியும்? முப்பதினோர் ஆராய்ச்சிக்கே இவ்வியல் பிற இயல்களினும் நீண்டுவிட்டது. இனியும் நீட்டிப்பது நூலுக்கு வனப்பளிக்காதன்றோ? அற்றைக் கல்விமுறை கற்றார்க் கெல்லாம் அறிவுச் சமநிலையும் புலமைச் செம்மையும் கொடுத்த பெற்றியதாக விளங்கிற்று.ஆதலின் சங்கப் புலவர்களை அவர் பாடிய பாடல் எண்ணிக்கையைக் கொண்டு அளத்தல் பொருந்தாது. அதனால் பத்தினும் குறையப் பாடியோர் சிலரும் என் ஆய்வுக்கு உரியோராயினர். பாடல் பல பாடினோர். ஆய்வுக்குப் பொருள் பெரிதும் உதவுவோர் ஆதலின், அப் பலரைக் கூறாது விடுகை சாலாது. இப் பலருள்ளும் சிலர் விடுபட்டனர். மாமூலனார் முப்பது அகம் பாடிய புலவர். வரலாற்றுச் செய்திகளைத் தொடுத்துச் சொல்லும் இயல்பால், இவர் தம் அகப்பாக்களும் தடைப்பட்டு இயலுவன. நக்கீரர், பரணர் பாடல்களை ஆயுங்காலை, இவ்வகைப்பட்ட போக்கு விரிவாகக் காட்டப்பட்டிருத்தலின், மாமூலனார் விட வேண்டியவராயினார். முப்பதின்மரே இவ் வாறாவது இயற்கண் ஆராயப்பட்டவர் எனினும், முன்னியல்களில் வேறு சில புலவர்களும் ஆராயப்பட்டமை நினைவுக்குரியது. அகத்திணைக் கல்வி என்னும் முடிபியலில், பாலன்பு, பெண்ணுரிமை, பாற்கல்வி என்ற முப்பெருங் கருத்துக்கள் மீண்டும் வலியுறுத்தப்பெறும். அகந்தோய்ந்த மெய்யின்பத்தை மெய்யின் பமாகப் போற்றியது சங்ககாலம், காமம் என்னும் சொல் இழி. காமத்தைக் குறித்தது பிற்கால வழக்கு, பொதுவான மெய்வேட் கையைக் குறிக்கவே இச்சொல் பண்டு வழங்கிற்று. அகவிலக்கியம் உள்ளக் காதலோரின் பல்வேறு தூய பால்நிலைகளைப் பாட்டுப் படுத்தும். பழந்தமிழ்ச் சமுதாயம் பெண்ணினத்தை நல்லினமாகக் கொண்டாயிற்று. காதற் செய்கையிலும் இல்லறத்திலும் உரிமையளித்த பெற்றி இதற்கு ஒரு சான்று. அகமாந்தர்களுள் தலைமை தலைவிக்கே என்றும், பிற மாந்தர்கள் தலைவி வழிபட்டவர்களே என்றும், தலைவியின் பண்புகள் கற்பினைச் சார்ந்து பொலிவனவே என்றும் நாம் தெளிய வேண்டும். தமிழ்ச்சான்றோர் காதற்காமத்தை ஒரு தனிப் பொருளாகப் போற்றி ஒரு தனியிலக்கிய வகையே படைத்த நோக்கம் காதற்பருவம் புகும் இருபாலார்க்கும் ஒழுக்கமுடைய காமக்கலையைக் கற்பிப்பதுவே என்பது என் துணிபு. கணவன் மனைவியின் இளமைப்பருவ உடற் புணர்ச்சி காதலொழுக்கத்தின் செவ்விய பாகம் என்பது அக நூலோர் துணிபு. உள்ளத்தோடு இயைந்த உடற் கலவியைச் சிறப்பிக்கும் அகத்திணைப் பாற்கல்வி உயிரை வளர்க்கும் ஆற்றலுடையது. ‘உறுதோறு உயிர்தளிர்ப்பத் திண்டல்’ என்பர் திருவள்ளுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/43&oldid=1237146" இலிருந்து மீள்விக்கப்பட்டது