பக்கம்:தமிழ்க் காதல்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

தமிழ்க் காதல்


தலைவியாவாளைப் பாங்கன் நேர்நின்று காணலும் முன்னின்று மொழிதலும் தமிழ் அகத்திணைக்கு ஒவ்வா, தமிழகம் பெற்ற மகளிர் நாணத்துக்கு ஏலா, ஈண்டு பாங்கன் தலைவியைத் தான்காண்பான், அவளால் காணப்படான். தலைவி பாங்கன் தன்பக்கமாகச் செல்வதைக் கண்டாலுங்கூட, அவனை ஒரு வழிப்போக்கன் எனவே கருதிவிடுவாள். தன்னைப் பார்த்துவரத் தலைவன் விடுத்த தோழன் என எண்னாள். ஏன்? தலைவனது தோழர்கள் யார் என்பதுபற்றி அவளுக்குத் தெரியாது. தோழியிற் கூட்டம் போலப்பாங்கன் உரையாடி இடைநின்று கூட்டாமையின்’ (தொல், 1047) என நச்சினார்க்கினியரும், “தன் வயிற்பாங்கன் அவள்வயிற் பாங்கு செய்யரன்" (தொல், 1443) எனப் பேராசிரியரும் பாங்கன் கருமத்ை வரையிறுத்தல் காண்க. s குறித்த இடத்துத் தலைவி வந்து நிற்கின்றாளா? என்பதைப் பார்த்துச் சொல்லும் ஒர் அறிவிப்பாளனே பாங்கனாவான். எனினும், இவன் தொடர்பால் அகத் தலைவனுக்கு இருநலம் உண்டு. இன்ப வெள்ளத்தால், துன்பப் புயலால் நெஞ்சு அலையும்போது, அவற்றைப் பிறரிடம் பேசினால் ஆறுதல் உண்டாகும். கேட்பதற்கு உற்ற நண்பர்களும் நண்பிகளும் வேண்டும். தலைவன் எதிர்பாரா நிலையில் ஒரு நங்கை பால் காதல் கொண்டு தன் நெஞ்சகத்தைப் புதிய உணர்ச்சிகளுக்குப் பறிகொடுத்து விட்டான். காம வணுவும் காம சுரமும் அவன் உள்ளத்தைத் தின்றன. ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற் கையில் ஊமன் கண்ணிற் காக்கும் வெண்ணெய் உணங்கல் ப்ோலப் - பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே (குறுந் 58) என்றபடி, களவுத்தலைவன் தன்வயம் இழந்து, காமவயத்தன் ஆனான். திருமணத்துக்குப்பின் தலைவி உடன்வாழ்வாளாதலின், தலைவனது காமவேகத்துக்கு இடனில்லை. களவொழுக்கத்தோ அவள் காணற்கும் கலத்தற்கும் அரியவள். அதனால் அவனுக்கு மேலும் காமசுரம் பெருகின் உயிர்போதலும் கூடும் அறிவு திரியவும் செய்யும். இந்நிலையில் பாங்கன் ஒரு பற்றுக்கோடு. அவனிடத்துத் தன் தலைவியைத் தெய்வச்சாயல் உடையவள், மெல்லியள்' அரும்பிய முலையள், சிவந்த வாயினள் (ஐங், 255) என்று சொல்லுந் தோறும் 'சிறுபாம்புக்குட்டி காட்டானையை வருத்தியதுபோல அவள் மெல்லுறுப்புக்கள் என்னைத்தாக்கின (குறுந் 119) என்று சொல்லுந்தோறும் தலைவனுக்கு மனவேகம் தணியவும், அறிவு நிலைக்கு வரவும் காண்கின்றோம். தலைவன் கூற்றாக 25 பாடல் இருப்பதற்கு இவ்வுளவியலே காரணமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/62&oldid=1237192" இலிருந்து மீள்விக்கப்பட்டது