பக்கம்:தமிழ்க் காதல்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணை பாகுபாடு

61


என்று தோழி இடைப்புகுந்து உரைக்கப் பார்க்கின்றோம். பிற மலைகளை மேலே பாடாதபடியும், தலைவனது மலையையே திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டிருக்கும்படியும் கட்டு விச்சியை வேண்டினாள் தோழி. தோழியின் துணிச்சல் தாயின் சிந்தனையைத் தூண்டுமன்றே? 'இம்மலை யொன்றில் இவர்கட்கு ஈடுபாடு ஏன்? 'நன்னெடுங் குன்றம்’ என்று பாராட்டுவதேன்? மகள் மெலிவுக்குக் காரணம் இம்மலைவாழ் ஒருவனோ? தமிழ்ப் பெண்கள் கணவர் பெயர் கூறார் ஆதலின், அவர் என்று சுட்டினரோ? என்றெல்லாம் தாய்க்கு ஆராய்ச்சி தோன்றுகிறது. வெறியாட்டால் இவ்வாறு தோழி அன்னைக்கு அறத்தொடு நிற்கவும், மறை வெளியாகவும் இடம் ஏற்படுகின்றது.மேலும் தலைவனை நோக்கி, நின்னால் இவள் வருந்தவும், முருகனால் வந்தது என்று வேலன் சொல்ல நீ வைத்துக் கொள்ளலாமா? இது கெழுதகை கொல்?’ (ஐங். 245) என்று தோழி இடித்துரைக்கவும் வரைவு முடுக்கவும் வெறியாட்டு கருவியாகின்றது. சமுதாயச் சடங்குக்கும் கற்பொழுக்கத்துக்கும் ஒரு போராட்டத்தை வெறியாட்டிற் காணலாம். முதுமை மரபைப் பின்பற்றும், இளமை முதுமையை எள்ளும் என்ற நிலையில் வெறித்துறைப் பாடல்கள் எழுந்துள. எதிர்ப்புணர்ச்சிகள் புலவோர் பாடுதற்குக் கவர்ச்சியான இடங்களாம். ஆதலின் இத்துறையில் 40 பாடல்கள் சங்கவிலக்கியத்து உண்டு. காமக்கணியார் மூன்று அகச்செய்யுட்கள் பாடிய பெண் புலவர். இம் மூன்றும் (அகம் 22, 98; நற். 268), வெறிப்பொருளனவே. இவ்வொரு துறையை ஆழ்ந்து பாடவல்ல புலமை பற்றி, வெறி பாடிய காமக் கணியார் என்று இவர் சிறப்புப் பெற்றார். அன்னை - மகள் பூசலை ஒரு பெண் புலத்தி பாடுவது சிறப்புத் தானே! கபிலரின் 'வெறிப் பத்துப் பாடல்கள் (ஐங். 24.1-50) அன்னையின் அறியாமை, வேலனின் அறியாமை, தோழியின் எதிர்ப்பு, தலைவியின் கற்பு முதலியவற்றைத் தொடர்பாக நமக்கு அறிவூட்டுகின்றன. எல்லாப் பாடலிலும் கற்பின் வென்றியே இலங்கக் காண்கின்றோம். x அலர் ஐந்திணை இலக்கியத்துக்கு அழகு செய்பவர் உள்ளுர்ப் பெண்டுகள். அவரின்றேல் அவ்விலக்கியம் உப்பின்றியிருக்கும். 'அல்லது செய்தல் ஒம்புமின் (புறம். 195) என்பதற்கு நேர்மாறாக ஊர்ப்பெண்டிர் செய்வது அல்லதேயாயினும், சமுதாய நெறிக்கு நல்லது என்ற கருத்தால் தமிழ்ச் சான்றோர் ஊராரையும் அகத்திணை யிலக்கியத்துப் போற்றிக் கொண்டனர். களவிலும் கற்பிலும் ஊரார்க்கு இடனுண்டு, (தொல் 107). ஊரார் என்பது ஆண்பெண் இருபாற்கும் பொதுச் சொல்லாயினும் அகத்திணையில் பெண்டிரையே குறிக்கும். வீட்டகத்துச் செய்திகளை அடுக்களைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/75&oldid=1237206" இலிருந்து மீள்விக்கப்பட்டது