பக்கம்:தமிழ்க் காதல்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

தமிழ்க் காதல்


சொன்னால் நாணி மடிவாள் என்பது அவளச்சம், மகள் நீங்கிய தன்மனையைப் பொலிவற்ற வறு மனையாகக் காண்கிறாள். "அன்னை அறியின் இவனுறை வாழ்க்கை எனக் கெளிதாகல் இல்” என மகள் கருதிய அறியாமைக்கு இரங்குகின்றாள். அச்சுறுத்தும் தாயார் உலகத்துப் பலர் இருக்கலாம், தான் அவ்வினத்தாள் இல்லை என்று காட்டிக் கொள்ளத் துடிக்கின்றாள். காதலர்கள் பகலெல்லாம் சுரநெறி கடந்து இரவிடை ஒருளில் தங்குவார்களன்றே; அவ்வூர்க்கு அவரினும் முன்னம் சென்று அவரை விருந்தாக ஏற்றுத் தங்குமிடம் கொடுத்துத் தன் நல்லன்பைக் காட்டும் வாய்ப்புக் கிட்டாதா? என்று வேணவாக்கொண்டு கற்பனை பண்ணுகின்றாள். களவுக்குமரியர் தம் மறைவொழுக்கத்தால் தாமே அஞ்சவேண்டியவர் ஆகின்றார் என்பதும், அன்னையர் என்றும் அன்புடையர் என்பதும் இதனால் பெறப்படும். காதல் நம்பிமார் நங்கைமார் உடன்போக்கும், போயபின் நற்றாய் இரங்கலும் புலவோர்தம் கற்பனைப் பாய்ச்சலுக்கு வளமான துறைகளாம். 122 பாடல்கள் - களவுச் செய்யுட்களில் ஏழில் ஒரு கூறு - இத்துறைப் பாலன. இவற்றைப் பாடினோர் இருபத்தெண்மர். இத்துறை யொன்றில் புலங்கண்டவர் கயமனார் ஆவார். இவர் பாடிய இருபத்திரண்டு சங்கச் செய்யுட்களில் இருபது உடன் போகலும் தாயிரங்கலுமே பற்றியவை: அகநானூறு: நற்றிணை, குறுந்தொகை என்ற ஐந்திணைத் தொகைநூல் மூன்றினும் காணப் படுபவை. கயமனாருக்கு அடுத்து இத் துறையிற் புலமை சான்றோர் ஐங்குறுநூற்றில் பாலைக்குறுநூறு பாடிய ஒதலாந்தையார். மகட்போக்கிய வழித் தாயிரங்கு பத்து உடன்போக்கின்கண் இடைச்சுரத்து உரைத்த பத்து மறுதரவுப் பத்து (ஐங், 371-400) என்ற தலைப்புக்களிலும் பிறதலைப்புக்களின் இடையிலும் 35 செய்யுட்கள் இத்துறை மேலனவாகக் கணக்கிடலாம். காதலர் வழிச்செலவையும் வரவையும் தாயின் அவலத்தையும் ஆசையையும் வகுத்து வளர்த்து துணித்துப் பாடும் இவர் கூர்திறம் புதுமை யுடையது. - காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும் பாங்கொடு தழாலும் தோழியிற் புணர்வுமென் றாங்கநால் வகையினும் அடைந்த சார்பொடு மறையென மொழிதல் மறையோர் ஆறே. (தொல், 1443) களவு நூற் புலவர் களவொழுக்கத்தைக் காமப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், தோழியிற் கூட்டம் என்று நால்வகைப்படுத்துவர் எனத் தொல்காப்பியம் மொழிந்த நெறிப்படி, காரணத்தோடும் காட்டோடும் கணக்கோடும் களவுத்துறைகளைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/88&oldid=1238370" இலிருந்து மீள்விக்கப்பட்டது