பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 தமிழ்க் காப்பியங்கள்

கடவுள் வாழ்த்து

இதனை ஆசி யென்பர் வடநூலார். இப் பெயருடன் ஓர் அலங்காரத்தைப் பின்னர் விரித்துக் கூறுவர் தண்டி யாசிரியர். தமிழ் நூல்களில் கடவுள் வாழ்த்தென்பது வாழ்த்து, வணக்கம், வருபொருள் உரைத்தல் என்னும் மூன்றுக்கும் பொதுவாக வழங்குகின்றது. தண்டியலங். காரம் கூறுவது வடமொழியைப் பின்பற்றியது. தமிழில் தேவ பாணி, தேவர்ப் பரவுதல் என்னும் தொடர்கள் கடவுள் வாழ்த்தின் வகைகளாகக் காணப்படுகின்றன. இவற்றின் சொற்பொருளைக் கொண்டு ஆராயின், தேவ பாணி யென்றது தாளத்தொடு பொருந்திய கடவுள் வணக்கச் செய்யுள் என்றும், தேவர்ப் பரவுதல் கடவுளை முன்னிலைப்படுத்தி வணங்குதல் என்றும், கடவுள் வாழ்த்து என்பது கடவுளை வாழ்த்தும் வாழ்த்தென்றும் தோற்றுகின்றது. - -

கடவுள் வாழ்த்தைப்பற்றிக் கூறும் தொல்காப்பியச் சூத்திர உரையில் இளம்பூரணர் அது கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவராற்றுப்படை, புகழ்தல், பரவல் என ஆறு வகைப்படும் என்பர். அவர் கருத்துப்படிக் கொடிநிலையென்பது கடவுளின் கொடியைப் புகழ்வதாம். கந்தழி யென்பது கடவுள், அரண் எறிந்து பகை வென்ற திறத்தைப் பாடுதல், வள்ளி யென்பது வெறியாட்டைக் கூறுவது. புலவராற்றுப்படையென்பது அறிவிஞல் அமைந்தான் ஒரு புலவனைக் கடவுளிடத்தே ஆற்றுப் படுத்துவது. புகழ்த லென்றது கடவுளைப் படர்க்கையிற் புகழ்தல். பரவுதல் முன்னிலையில் வைத்துப் போற்றுதல். இவை இளம்பூரணர் கருத்தாயினும் இலக்கியங்களில் கடவுள் வாழ்த்தாகப் பயின்று வருவன பெரும்பாலும் புகழ்தலும் பரவுதலுமே யாம். - -

1. கு. 38. -