பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் 331

முந்தை நல்வினைப் பயனால் முன்னவன் தந்தருளிய அருட்டிறமாகும். -

நக்கீரன் நல்கிய திருமுருகாற்றுப் படைக்குக் குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பாவில் பொருள் காணலாம். அரிய சித்தாந்த உண்மைகள் நிறைந்த தத்துவநூல் கந்தர் கலிவெண்பா. சைவாகமங்களில் அத்துவப் பிரகரணத்தில் பேசப்படும் அத்துவாப் பகுதிகள் மிகமிக அருமை வாய்ந்தன; எளிதில் எட்டமுடியாதன. அத்துவாக்களைப் பற்றி யறிவது, கந்தபுராணம் அட்டகோசப் படலத்திற்கு உரை காண்பது போலத்தான். சிறந்த சித்தாந்த வல்லாரும் அத்துவாக்களைப் பற்றிக் கேட்டால் சொல்ல அறியார். அத்தகைய அத்துவாக்களின் இயல்பைத் தெளிவுறத் தம் கந்தர் கலிவெண்பாவில் குமர குருபரர் கூறுகிறார். தெய்வத் திருவருள் கைவந்த மையின் அங்ஙனம் எடுத்துக்காட்டும் ஆற்றல் பெற்றனர்.

குமரகுருபரர், திருமுருகனைக் கண்களால் தரிசித்தார். அவனது திருக்கோலத்தை இனிய பாட்டால் தந்தார்.

யான் எனது என்பது அற்ற இடமே அவனது திருவடி, மோன பரமானந்தம்-முடி, ஞானம்-திருவுரு, இச்சை செயல் அறிவு-கண்கள், அருள்-செங்கை, இருநிலமே சந்நிதி, இங்ஙனமாக விளங்கும் தனிச் சுடர் என்று கண்டு கூறினார். தம்மைப் பேசுவித்த செயல் முருகனுக்கு அத்துணைப் பெருஞ்செயலன்று.