பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

103


தோற்றொழிந்த வேந்தரின் முரசங்களே பானைகளாவும், வீரர்களின் முடித்தலைகளே அடுப்பாகவும், ஓடுகின்ற குருதிப்புனலே உலைநீராகவுங் கொண்டு அங்குச் சிதறிக்கிடக்கும் தசை, மூளை முதலாயின பெய்து, வீரவளை யணிந்த தோளாகிய துடுப்புக்களால் துழாவிய உணவினால் திருக்களவேள்வியைச் செய்து முடித்தான். அது கண்டு களித்த விந்தைமகள் விரைந்து வந்து அச்செழியனது கொழுவிய புயங்களிற் கொலுவீற்றிருப்பதானாள்.

விந்தை மகள் : விரலெக்ஷுமி.
நூல் : பாண்டிய ராஜ வம்ச சரித்திரம் (1926) பக்கம் : 25
நூலாசிரியர் : ஆர். அரிகரமையர்
(அம்பாசமுத்திரம், தீர்த்தபதி ஹைஸ்கூல் தலைமைத் தமிழ்ப் பண்டிதர்)

இலங்கையில், ஆங்கிலப் பாஷையில் 'நிகொம்போ' என்றும், தமிழில் நீர்கொழும்பு என்றும் பெயர் வழங்கி வரும் நகரமானது பூர்வத்தில் இராவணன் மகன் இந்திரஜித்தன் என்பவன் நிகும்பலை என்னும் யாகம் நடத்திய விடமாம். ஆதலினால்தான் அவ்வூருக்கு ஆதியில் நிகும்பலை எனும் பெயர் வழங்கியதென்றும், அப்பெயர் நாளாவட்டத்தில் நீர் கொழும்பென மாறிவிட்டதென்றும் சொல்லப்படுகிறது.

இதழ் ; சத்திய நேசன் 1926, டிசம்பர்.
Play Ground – விளையாட்டுப்புலன்

முதன் முதலில் ஆதித்தியன் மகனான பராந்தகன் மதுரையை வென்று இலங்கைக்குப் போய் அவ்விடத்திலும் ஜயம் பெற்றான் என்பதும் அவனது ஆட்சியில் கிராம பஞ்சாயத்து ஓங்கி வளர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கவை. இவ்வம்சத்தில் பத்தாவது அரசனாகிய ராஜ ராஜன் கீர்த்தி மிக அரியது. ஏனெனில் அவன்தான் தமிழகத்திலுள்ள நாடுகளையும் இலங்கைத் தீவையும் முதன் முதலில் ஒரு குடையின் கீழ்க் கொண்டு வந்தவன்.

இம்மன்னனின் குமாரத்தி குந்தவ்வையார் கீழச் சளுக்கிய விமலாதித்தியனை மணம் புரிந்து கொண்டதனால் அவர்கள் வம்சத்தில் தோன்றிய (பதினேழாவது சோழன்) குலோத்துங்க சோழன் சென்னை ராஜதானியின் வடஎல்லை வரையிலும் ஒருகால் அரசு புரியலாயினன்.

ராஜ ராஜனின் நன்கொடைகள் பலவுள. அவன் சைவ சமயத்தில் ஆழ்ந்தவனாயினும் நாகையில் புத்தர்களுக்கும் கோவில் கட்டுவித்தான். அதைப் பதினைந்தாவது நூற்றாண்டு வரை வெளிநாட்டார்கள் தரிசனஞ் செய்து கொண்டிருந்தனராம்.