பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

53


திருப்தியடைந்து தம் அபிப்பிராயத்தை அங்குள்ள பார்வையீடு புத்தகத்தில் (visitors Book) குறிப்பிட்டார். ஸ்ரீமான் காந்தி ஆங்கிலத்தில் நிபுணரா யிருந்தயோதிலும் அப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள அபிப்பிராயங்க ளெல்லம் ஆங்கிலத்தில் இருந்தனவேனும் அவையொன்றையும் கவனியாதவர் போல் தம் அபிப்பிராயத்தைத் தாய்பாஷயாகிய குஜராத்தியில் குறிப்பிட்டது பலருக்கு வியப்பை உண்டு பண்ணிற்று.

இதழ் : விவேக பேதினி (1915) தொகுதி, பகுதி 11 பக். - 409,
சொல்லாக்கம் : சி. வி. சாமிநாதையர்.
சுவாமி வேதாசலம் - மறைமலை அடிகள்
(1916)

பொதுநிலைக் கழக மாளிகை அழகிய பூங்காவினாற் சூழப்பெற்றிருந்தது. உள்ளமும் உடலும் நலமுறக் காலையினும் மாலையினும் அடிகளார் தம் அருமருந்தன்ன மகளுடன் உலாவி வருவார். தம் மகளையுந் தம்மைப்போலவே இன்னிசையிலே பயிற்றுவித் திருந்தனர் அடிகள். 1916இல் ஒருநாள் மாலை இராமலிங்க அடிகள் பாடிய,

"பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
பிள்ளை யைப்பெறுந் தாய்மறந்த தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
உயிரை மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சங் கலைமறந் தாலும்
கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்குமென்
நமச்சி வாயத்தை நான்மற வேனே

என்னும் இப்பாடலை உள்ளமுருக உயிருருக ஓதி முடித்தனர் அடிகள். அப்பொழுது அடிகளின் உள்ளம் அப்பாடலின் இன்னோசையிலே மூழ்கியது.

நீலா! இப்பாடலிலுள்ள ’தேகம்’ என்ற வடசொற்கு மறாக, ’யாக்கை’ என்னுந் தமிழ்ச்சொல் ஆளப்பட்டிருப்பின் சொல்லோசை மேலும் இனிமையாக இருக்குமன்றோ? வடசொற்களும் ஏனை அயன்மொழிச் சொற்களுந் தமிழிற் கலப்பதால், தமிழ்மொழியின் இனிமை குறைவதுடன், தமிழ்ச் சொற்கள் பலவும் நாளடைவில் மறைய, அயன்மொழிச் சொற்கள் ஏராளமாகத் தமிழில் நிலைபெற்று விடுகின்றன. இதனாற் காலஞ் செல்லச் செல்லத் தமிழ்ச்சொற்கள் சிறுகச் சிறுக மறைந்தழிகின்றன. இவ்வாறே நிகழ்ந்து கொண்டிருந்தால், தமிழ்மொழியும் இறந்துபோன மொழிகளில் ஒன்றாகிவிடுமன்றோ? என்று கூறினர் அடிகள்.