பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

தமிழ்த் தாத்தா

கவலை அவருக்கு இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் அந்தமரங்களில் புதிய தளிர் விட்டிருக்கிறதா என்று பார்ப்பாராம். இதனை உணர்ந்து இவர் விடியற்காலையில் எழுந்திருந்து, அந்த மரங்களைப் பார்த்து, எங்கே புதிய தளிர் விட்டிருக்கிறது என்று தெரிந்துகொள்வார். பிள்ளை தளிரைப் பார்த்து வரும் போது, எங்கு எங்கே புதிய தளிர் விட்டிருக்கிறது என்று இவர் சுட்டிக் காட்டுவார். இதனைக் கண்டு இவரிடத்தில் பிள்ளைக்கு அன்பு மிகுந்தது. மெல்ல மெல்ல அவரோடு இவர் உரையாடத் தொடங்கினர். “இப்போது என்ன பாடம் நடக்கிறது?” என்று அவர் கேட்டார். “நைடதம் கேட்கிறேன். மேலே ஐயா அவர்களை எனக்குப் பாடம் சொன்னால் நன்றாக இருக்கும்” என்று விண்ணப்பித்துக்கொண்டார், அது முதல் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடமே பாடம் கேட்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அவர் பாடிய திருக்குடத்தைத் திரிபந்தாதியை முதலில் பாடம் சொன்னார். இவ்விளைய மாணாக்கரிடத்தில் காணப்பெற்ற தமிழ்ப் பசியைப் பிள்ளை தெரிந்துகொண்டார். இவரது பசிக்கேற்ப ஒருநாளில் பல பாடல்களைப் பாடம் சொல்லி வந்தார். பஞ்சத்தில் அடிபட்டவன் சிறிது சிறிதாகப் பல இடங்களில் உணவுபெற்று உண்டு, பிறகு ஓரிடத்தில் வயிறு நிறையச் சோறு உண்டதுபோல ஒருவகை உணர்ச்சியை இவர் பெற்றார். இவரே சொல்கிறார்:

“எனக்கிருந்த தமிழ்ப் பசி மிக அதிகம். மற்ற இடங்களில் நான் பாடம் கேட்டபோது அவர்கள் கற்பித்த பாடம் யானைப் பசிக்குச் சோளப்பொரி போல இருந்தது. பிள்ளையவர்களிடம் வந்தேன். என்ன ஆச்சரியம்! எனக்குப் பெரிய விருந்து, தமிழ் விருந்து கிடைத்தது. என் பசிக்கு ஏற்ற உணவு. சில சமயங்களில் அதற்கு மிஞ்சிக்கூடக் கிடைக்கும். ‘இனி நமக்குத் தமிழ்ப் பஞ்சம் இல்லை' என்ற முடிவிற்கு வந்தேன்”

என்று எழுதுகிறார்.

வரிசையாகப் பல பிரபந்தங்களை மகாவித்துவானிடம் இவர் பாடம் கேட்டார். பல அந்தாதிகளையும், பிள்ளைத் தமிழ் நூல்களையும், வேறு பிரபந்தங்களையும் இவர் கற்றார். பாடம் சொல்வதற்காகவே அவதரித்தவர்போல மகாவித்துவான் விளங்கினார். பாடம் கேட்பதற்காகவே வந்தவர்போல இவரும் இருந்தார். இரண்டு பேர்களுடைய உணர்ச்சியும் ஒன்றுபட்டுச் சங்கமமாயின. அதனால் இரண்டு பேர்களுக்கும் பயன் கிட்டியது. மகாவித்துவான் பாடம் சொன்னார். தம் பசி தீர இவர் பாடம் கேட்டார். நன்றாகப் பாடம் கேட்கும் மாணாக்கரிடம் ஆசிரியருக்குத் தனி அன்பு உண்டாவது இயற்கை. ஆகவே, இந்தப் பெருமானிடம் கவிச்