பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்த் தாத்தா

27

வில்லை. தியாகராச செட்டியார் அவரிடம் மிகவும் சாமர்த்தியமாகப் பேசி அவரது இசைவைப் பெற்றுக்கொண்டார்.

நல்ல வேளை பார்த்து ஆசிரியப் பெருமானைக் கும்பகோணத்திற்கு அனுப்பி வைத்தார்கள். புறப்படும்போது, நீர் தியாகராச செட்டியார் ஸ்தானத்தை வகித்து நல்ல புகழ் பெறுவதன்றிச் சென்னைக்கும் சென்று தாண்டவராய முதலியாரும், மகாவித்துவான் மகாலிங்கையரும், விசாகப் பெருமாளையரும் இருந்து விளங்கிய ஸ்தானத்தைப் பெற்று நல்ல கீர்த்தி அடைந்து விளங்க வேண்டும்” என ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார். அந்த அன்பும், அருளும் நிறைந்த வார்த்தை பிற்காலத்தில் அப்படியே பலித்தன. ஆசிரியப் பெருமான் அடிக்கடி அதை நினைவுகூர்ந்து உருகுவார்.

கும்பகோணத்திற்கு வந்தவுடன் அந்த ஊர்க் கல்லூரியில் இருந்த ஆசிரியர்கள் ஆசிரியருடைய புலமையைச் சோதிக்க எண்ணினார்கள். அவர்கள் சொன்ன பாடல்களை எல்லாம் ஆசிரியர் எடுத்து விளக்கினார். அவர்கள் குறிப்பிட்ட நூல்கள் அனைத்தும் ஆசிரியர் பாடம் கேட்டவையே. நீர் புதிய பாட்டு இயற்று வீரா? என்று கேட்டதற்கு, எனக்குத் தெரிந்தவரையில் இயற்றுவேன்' என்று ஆசிரியர் சொன்னார். உடனே தியாகராச செட்டியாரை வைத்து அவரிடம் சொல்வதுபோல ஒரு பாட்டைப் பாடச் சொன்னார்கள். சில நிமிடங்களிலேயே ஆசிரியப் பெருமான் பின்வரும் பாட்டைப் பாடி முடித்தார்.

வாய்ந்தபுகழ் படைத்திலங்கு மீனாட்சி
      சுந்தரநா வலவன் பாலே
ஏய்ந்த தமிழ் ஆய்ந்தமுறைக் கியைவுறநீ
      இதுகாறும் இனிதின் மேய
ஆய்ந்தவள நகர்க்குடந்தைக் காலேஜில்
      நின்னிடமெற் களித்தல் நன்றே
வேய்ந்ததமிழ் முதற்புலமைத் தியாகரா
      சப்பெயர்கொள் மேன்மை யோனே!

அங்கே இருந்த பேராசிரியர்கள் இதைக் கேட்டு மிகவும் வியந்தார்கள். மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்டவருக்கு இத்தகைய திறமை இருப்பது ஆச்சரியமன்று என்று புகழ்ந்தார்கள். அப்போது கல்லூரி முதல்வராகக் கோபால்ராவ் இருந்தார். அவர் இந்தச் செய்திகள் அனைத்தையும் கேட்டுத் திருப்தி அடைந்து உடனே வேலையை மேற்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார். அது முதல் ஆசிரியப் பெருமானுடைய மூன்றாவது வாழ்க்கைப் பகுதி தொடங்கியது. கல்லூரி ஆசிரியர் என்ற