பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

தமிழ்த் தாத்தா

பாண்டித்துரைத் தேவர். “நான் இன்று அரண்மனை போயிருந்தேன். பாஸ்கர சேதுபதி அவர்கள் இந்தச் செய்தியைத் தெரிவித்தார்கள்” என்று சொன்னார். “இந்நாள் வரை தங்களுக்கு எந்தவிதமான உதவியும் அவர் செய்யாமல் இருந்தது பெரிய தவறு என்று நினைக்கிறார்கள். ஆகவே தம் ஜமீனிலுள்ள ஒரு கிராமத்தையே தங்களுக்கு வழங்க எண்ணுகிறார் . இந்தச் செய்தியைத் தங்களிடம் தெரிவிக்கும்படி என்னிடம் சொன்னார்” என்றார்.

இதைக் கேட்டவுடன் பாண்டித்துரைத் தேவர் எதிர்பார்த்தபடி ஆசிரியருக்கு மகிழ்ச்சி அதிகமாக உண்டாகவில்லை. அவரிடம், “மகாராஜா அவர்களுடைய எல்லையற்ற அன்பை நான் இதனால் உணர்ந்துகொள்கிறேன். என்னுடைய கருத்தை நான் அவர்களிடமே நேரில் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டார்.

ஆசிரியர் பாஸ்கர சேதுபதியைப் பார்க்கச் சென்றபோது, தம்முடைய விருப்பத்தை ஏற்று, தமக்கு நன்றி சொல்ல வந்திருக்கிறார் என்றே மன்னர் எண்ணினார். ஆசிரியரும், தம் பேச்சில், எடுத்தவுடன் இதைச் சொல்லவில்லை. சிறிதுநேரம் வேறு விஷயங்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்துவிட்டு, முடிவில் சொன்னார்:

“பாண்டித்துரைத் தேவர் அவர்கள் மகாராஜா சொல்லி அனுப்பிய செய்தியைத் தெரிவித்தார். அதன் மூலம் மகாராஜா அவர்களுக்கு என்பால் எவ்வளவு அன்பும், நம்பிக்கையும் இருக்கின்றன என்பதை உணர்ந்துகொண்டேன். எனக்கு இப்போது ஒன்றும் குறை இல்லை. ஆண்டவன் திருவருளால் கல்லூரியில் சம்பளம் வருகிறது. நான் செட்டாக வாழத் தெரிந்தவன். தாங்கள் வழங்குவதை ஏற்க மறுக்கிறேன் என்று எண்ணக்கூடாது. சமஸ்தானத்தின் நிலைமையும் எனக்கு நன்கு தெரியும். இந்த நிலையில் இப்போது அவ்வளவு பெரிய கொடையைத் தங்களிடமிருந்து ஏற்பதற்கு என் மனம் உடன்படவில்லை” என்று சொன்னார். அப்போது அந்தச் சமஸ்தானம் பலவிதக் கடன் தொல்லைகளுக்கு உள்ளாகியிருந்தது. எனவே, ஆசிரியர் கருத்தை உணர்ந்துகொண்டு ஒரு பதிலும் சொல்லாமல் சிறிது நேரம் மெளனமாக இருந்தார் மன்னர். பின்னர், “தங்கள் விருப்பம்” என்று சொல்லி விடை கொடுத்தனுப்பினார். தமக்குக் கிடைக்க இருந்த ஒரு கிராமத்தையே தாம் இழந்துவிட்டோமே என்ற எண்ணம் ஆசிரியருக்கு எந்தக் காலத்திலும் எழுந்தது இல்லை.

கும்பகோணம் கல்லூரியில் அந்தக் காலத்தில் ராவ்பகதூர் வி. நாகோஜிராவ் என்பவர் முதல்வராக இருந்தார். அவர் இசையில் நல்ல ஞானம் உள்ளவர். இசை சம்பந்தமான புத்தகங்களை அவர் வெளியிட இருந்தார். அவற்றைத் திருத்தமாக வெளியிட வேண்டும் என்று விரும்பியதால் அவற்றைத் திருத்திக்