பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

தமிழ்த் தாத்தா

தோடு நிறுத்திவிடக் கூடாது. பாட்டு முழுவதையும் படித்தால், அவ்வாறு ஈடுபடுவது தவறு என்று சொல்லியிருப்பதைக் காணலாம். ஒன்பது சுவைகளில் சிருங்காரம் என்பது ஒன்று. வடமொழி நூல்களிலும் அந்தச் சுவை உண்டு. பெண்களின் வருணனை கூடாது என்றால் எத்தகைய இலக்கியங்களும் இருக்க முடியாது. நான் மிகப் பழைய இலக்கியங்களாகிய சங்க நூல்களை முதல்முதலாக வெளியிட்டிருக்கிறேன். அதனால்தான் தமிழ்நாடு என்னிடத்தில் கொஞ்சம் மதிப்பு வைத்திருக்கிறது. அவற்றில் கூடப் பெண்களின் வருணனை வருகிறது. அவற்றைப் படிக்கும் போது இலக்கியச் சுவையே தெரிகிறது. நீங்கள் அவற்றை எல்லாம் பொசுக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். வடமொழியில் உள்ள நூல்களும் அப்படித் தான், இவ்வாறு பார்த்தால் தமிழிலும், வடமொழியிலும் படிப்பதற்கு வேறு ஒன்றும் கிடைக்காது" என்றார்.

"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எல்லாப் புத்தகங்களும் ஆபாசமானவை என்றல்லவா தோன்றுகிறது?" என்றார் அதிகாரி.

"ஆபாசம் என்பது வேறு. ரச உணர்ச்சி வேறு. மனித வாழ்க்கையில் காதல் மிக முக்கியமான உணர்ச்சி. காவியங்களும், புராணங்களும் காதல் உணர்ச்சியைப் பற்றிச் சொல்கின்றன. ஆண்டவனைக் காதலனாக வைத்து, தங்களைக் காதலிகளாக வைத்து ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடியிருக்கிறார்கள். அங்கெல்லாம் சிருங்கார ரசம் இருக்கும்."

"அப்படியா? தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களிலும் சிருங்கார ரசம் இருக்கிறதா?" என்று கேட்டார் ஜயசிங்.

தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம் ஆகிய எல்லாவற்றிலும் இருக்கின்றன. ஆண்டவனிடத்தில் உள்ள பக்தியைக் காதலாக மாற்றி அவற்றைப் பாடியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் ஆபாசம் என்று தள்ள முடியாது" என்றார் இவர். "இதெல்லாம் எனக்குப் புதிதாக இருக்கிறது" என்று போலீஸ் அதிகாரி சொன்னார்.

நீங்கள் இவற்றை எல்லாம் நன்றாக ஆராய்ந்திருக்க மாட்டீர்கள். கிராமங்களில் பலர் கச்சு அணிவதில்லை. காய்கறி விற்கிறவர்கள், பால் தயிர் விற்கிறவர்கள், இன்னமும் பலர் அப்படி வருகிறார்கள். அவர்கள் தோற்றத்திலே ஆபாசம் இல்லை. பார்க்கிறவர்களின் கண்களில் தான் ஆபாசம் இருக்கிறது."

"நீங்கள் சொல்வது உண்மைதான்" என்று ஒருவாறு இறங்கிவந்தார் அந்த அதிகாரி.