பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உரைநடை

71

நீட்டினான். ஐயர் ஆவலோடு அதைப் பிரித்துப் பார்த்தார். அது வளையாபதி அன்று, வைசிய புராணம் என்ற நூலில் உள்ள ‘வளையாபதிச் சருக்கம்’ என்ற பகுதி அது. அதற்கும் வளையாபதிக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. "இதை ஒரு வழக்குக்குச் சாட்சியாகக் காட்ட என் தந்தையார் எங்கிருந்தோ கொண்டு வந்தார்" என்று அந்த இளைஞன் சொன்னான். அது அந்தப் பையனின் அறியாமைக்குச் சாட்சியாகத்தான் இருந்தது.

ஐயர் எழுதிய உரைநடை நூல்களை இருவகையாகப் பிரிக்கலாம். ஒருவகை வாழ்க்கை வரலாறுகள், மற்றொரு வகை, அவர் ஏடு தேடிய வரலாறுகள். தம்மோடு பழகிய பெரியவர்களை அவர் ஒருபோதும் மறந்ததில்லை. அவர்களைப் பற்றிய வரலாறுகளைத் தெரிந்தவரையில் சிறியதாகவும், பெரியதாகவும் எழுதியிருக்கிறார். அவற்றில் மிகவும் முக்கியமானது அவருடைய ஆசிரியராகிய மகாவித்துவான் ஶ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம். அதை இரண்டு பாகங்களாக எழுதினார். தாம் அவரிடம் தமிழ் பயிலப் போவதற்கு முந்திய நிகழ்ச்சிகளை முதற்பாகமாகவும் அவரிடம் சேர்ந்து தமிழ் பயின்ற காலத்தைப் பற்றி அப்புலவர் பெருமானுடைய இறுதிக் காலம் வரையிலும் இரண்டாம் பாகமாகவும் எழுதியிருக்கிறார். அவற்றைப் படிக்கும்போது ஐயருக்கு இருந்த குரு பக்தியை வியக்காமல் இருக்க முடியாது. மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களை, இக்கவிஞர் பெருமான், இப்புலவர் பிரான், இத்தமிழ்க் கவிஞர் என்று குறிப்பிடுவாரேயொழியப் பெயரைச் சொல்லிக் குறிப்பிடுவதில்லை. ஆனால் அவருடைய இளமைப் பருவத்தைக் குறிப்பிடும் ஓரிடத்தில் மட்டும் ‘மீனாட்சி சுந்தரம் பிள்ளை’ என்று எழுதியுள்ளார். அதுமட்டும் அன்று. உடனே அடிக்குறிப்பில், ‘இப்படி எழுத என் கை கூசுகிறது’ என்று எழுதியிருக்கிறார். ‘முதுமை காரணமாகக் கை நடுங்கியிருக்கலாம்’ என்று இக்காலப் பிள்ளைகள் நினைத்தல் கூடும்! உண்மையை உணர்பவர்களுக்கு இவருடைய குரு பக்தியின் ஆழம் நன்கு புலப்படும்.

பிள்ளையவர்கள் சரித்திரம் முதற்பாகம் எழுதி முடித்தவுடன் இரண்டாவது பாகத்தை எழுதி வந்தார். அப்போது கீழே விழுந்து பாதத்தில் வீக்கம் கண்டு எழுந்திருக்க முடியாமல் படுத்து விட்டார். டாக்டர் ரங்காச்சாரியார் அறுவைச் சிகிச்சை செய்தார்.

பிள்ளையவர்கள் சரித்திரம் எழுதி முடிக்கவில்லையே என்ற தாபம் இவர் மனத்தில் இருந்தது. டாக்டர்களும் மற்றவர்களும் எழுதக்கூடாது, படிக்கக்கூடாது என்று தடுத்துவிட்டார்கள். ஆனாலும் இவருக்கு, ‘இதை முடிக்காமல் என் உயிர் போய் விட்டால் என்ன ஆவது?’ என்ற ஏக்கம் இருந்தது.