பக்கம்:தமிழ்த் திருமண முறை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12


தமிழ்த் திருமண நிகழ்ச்சிகளும் பொருத்தமான மந்திரப் பாடல்களும்
1. இறைவழிபாடு

மஞ்சள் பிள்ளையார் பிடித்துவைத்து விளக்கேற்றி வைத்தல். ஆசிரியர் வடக்கு நோக்கி அமர்ந்து மணமகனை அழைத்துக் கிழக்கு நோக்கி அமரச் செய்தல். ஆசிரியர் பின்வரும் திருப்பாடலைப் பாடிக்கொண்டு மஞ்சள் கலந்த அரிசி, உதிரிமலர் ஆகியவற்றை மணமகன்கையில் கொடுத்துப் பிள்ளை யாரை வழிபடச் செய்தல்.

பிடியதன் உருவுமை கொள மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே.

2 கால்நடுதல்

அரசங்கிளை அல்லது ஆலங்கிளை ஒன்றினை மங்கல அணி அணிந்த மகளிர் மூவருடனும் மணமக்களுடனும் நடுதல். ஆசிரியர் பின்வரும் பாடலை ஓதிக்கொண்டு கால்களுக்கு. மஞ்சள், குங்குமம் இட்டுத் துணி கட்டச் செய்தல்.

மாவேலை ஆலமதை அடக்கித் தன்னுள்
        மண்ணுலகம் அண்டமெலாம் வளர்ந்துதானோர்
காவேயின் முன்னுதித்த அரசிற் றோன்றிக்
        கடம்புபுனை குருந்தினுக்குத் துணைய தாகித்
தூவேதந் தலைகாண்டற்கு அரிய தாகித்
        துன்பமுறு பிறவியெனுந் துகள்சேர் வெய்யில்
ஆவேனைத் தன்னடியாம் நிழலிற் சேர்த்த
        அத்திதனைப் பத்தி செய்து முத்தி சேர்வாம்.