பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிற்காலச் சோழர் வரலாறு

105


பேரரசுகளை விரிவாக்கியதும் சோழர் வீழ்ச்சிக்குக் காரணமாகும். மேற்கூறிய அனைத்தையும் முறியடித்து, கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சடாவர்மன் சுந்தரபாண்டியன் பாண்டியப் பேரரசை நிறுவினான்.

சோழர் கால ஆட்சி முறை

(சோழ மன்னர்கள் வெற்றி வீரர்கள் மட்டுமல்ல; திறமை மிக்க ஆட்சி புரியும் ஆற்றல் உடைய மன்னர்கள் என்றும் கூறலாம். சில மன்னர்கள் போரிலே புலிகளாக இருப்பர்; மாற்றாரும் கண்டு தோற்றுக் காற்றெனப் பறந்தோடச் செய்யும் பெரு வீரமிக்க மன்னர்களாகவும் இருப்பர்; கூற்றுவனும் அத்தகைய அரசர்களைக் காணின் குடல் கலங்குவான். ஆனால் அவர்கள் நாட்டை ஆளத் திறமை சிறிதும் இல்லாது இருப்பர். இதனால் கண்ணீரும் செந்நீரும் சிந்திப்பெற்ற பெரு நாடுகளை ஆளும்திறன் இல்லாது, மனமழிந்து இறந்த எத்தனையோ மன்னர் பரம்பரையை வரலாற்றிலே நாம் காணலாம். ஆனால் சோழ மன்னர்கள் அப்படியல்ல; நாட்டை நன்கு ஆளும் ஆற்றலும் பெற்றிருந்தார்கள். பிற்காலச் சோழர்கள் ஆட்சியிலே சோழ நாடு, நாடும் ஏடும் புகழவல்ல சிறந்ததோர் நல்லாட்சியைப் பெற்றுத் திகழ்ந்தது. எனவே சோழர் ஆட்சிக் காலத்தை, அதாவது கி. பி. 10-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து 13-ம் நூற்றாண்டின் இறுதி வரையுள்ள 400 ஆண்டு காலத்தை, தமிழ்நாட்டின் மற்றொரு பொற்காலம் எனக் கூறவேண்டும். அவர்கள் காலத்தில் நிலவியது முடியாட்சியே எனினும், முடியாட்சியின் உயிராக, உணர்வாகக் குடியாட்சியே கோலோச்சியது. இதனாலேயே டாக்டர் கிருட்டிணசாமி, டாக்டர் சிமித் போன்ற வரலாற்று வல்லுநர்கள் சோழர்களின் ஆட்சியை வானளாவப் புகழ்ந்துள்ளனர். சோழர் கால ஆட்சி முறையைத் தெள்ளத்தெளிய விளக்கவல்லது