பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிற்காலச் சோழர் வரலாறு

113


வரி தானியமாகவும் தங்கமாகவும் வாங்கப்பட்டது. சில வகை வரிகள் காசாகவே வாங்கப்பட்டன. தொழில் வரிகூட உண்டு. தட்டார்கள் தட்டார்ப் பட்டம் என்ற வரி செலுத்தினர். வாணியச் செட்டியார்கள் செக்கிறை, நெசவாளர்கள் தரியிறை, குயவர்கள் குசக்காணம், ஆயர்கள் இடைவரி முதலிய வரிகளைச் செலுத்தினர்.

செலவினம்

நீதி நிர்வாகம், படை, கப்பற்படை, சிறந்த அதிகாரிகள் குழு, பொதுநலத்துறை ஆகியவற்றிற்காகச் சோழர் காலத்தில் வருவாயில் பெரும்பங்கு செலவிடப்பட்டது. பல்லவ மன்னர்களைப் போலச் சோழ மன்னர்கள், பெருங்குளங்கள் வெட்டுவதிலும், அணைக்கட்டுகள் கட்டுவதிலும், நெடுஞ்சாலைகள் அமைப்பதிலும் கண்ணுங்கருத்துமாக இருந்தார்கள்.

படை

சோழ மன்னர்கள் இமயத்திற் கொடி பொறித்துக் கடாரத்திற் கல் நாட்டி, ஈழ நாட்டிற் கொடிகட்டி, உள் நாட்டில் ஆணை செலுத்தி, வலிவோடும் பொலிவோடும் தங்கள் சோழப் பேரரசை நிறுவிக் கட்டி ஆண்டதற்கு முக்கிய காரணம் அவர்கள் தம்மிடம் வைத்திருந்த பெரும்படையே ஆகும். இத்தகைய பெரும்படை தமிழ் நாட்டில் எக்காலத்திலும் இருந்ததில்லை என்றே கூறவேண்டும். நால்வகைப் படையோடு, கைக்கோளப் பெரும்படை, வில் வீரர்களாலான வில்லிகள் படை, அரசனது மெய்க்காப்பாளர்களாகப் பணியாற்றிய வேளக்காரர் படை, கடற்படை முதலிய படைகளும் நாடெங்கும் இருந்தன. இப்படைகள் வைக்கப்பட்டிருந்த இடம் ‘கடகம்' (Cantonment) என்று வழங்கப்பட்டது. இப்படைகளின் துணையால்தான் சோழப் பேரரசர்கள் பெரும் பெரும் வெற்றிகளை அடைந்தனர். மேலும் படைவீரர்களுக்