பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிற்காலச் சோழர் வரலாறு

115


பட்ட ஆட்சிமுறையாகும். சோழர்கால ஆட்சிமுறையில் உடல் முடியாட்சி; உயிர் குடியாட்சி என்க.

சோழர் காலத் தமிழகம்


அரசன்

கி.பி. 10-ஆம் நூற்றாண்டிலிருந்து 13-ஆம் நூற்றாண்டு முடிய, ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் சோழர் ஆட்சிக் காலமாகும். இக் காலத்தினைத் தமிழ்நாட்டின் மற்றொரு பொற்காலம் எனக் கூறுதல் வேண்டும். தெலுங்கு நாடு உட்பட தென்னிந்தியா முழுவதும் சோழர் ஆதிக்கத்தின்கீழ் இருந்தது எனக் கூறலாம். மேலும் சாவா, சுமத்திரா, ஈழம் முதலிய தீவகங்களிலும் சோழர் வெற்றிக்கொடி பட்டொளி வீசிப் பறந்ததைப் பல வரலாற்றாசிரியர்கள் பலபடப் பாராட்டியிருப்பது நாமறிந்ததொன்றே. சுருங்கக்கூறின் தமிழ்நாட்டை ஆண்ட அரசர்களில் சோழப் பேரரசர்களே எல்லா வகையானும் தலைசிறந்து விளங்கினர். பல சிறந்த பட்டங்களைப் பெற்று விளங்கினர். சோழ அரசர்கள் சக்ரவர்த்திகள் என்று மக்களாலும் பிற நாட்டவராலும் வழங்கப்பட்டனர். சோழ அரசியர் அவனி முழுதுடையாள், திரைலோக்கிய மாதேவி போன்ற பட்டங்களைக் கொண் டிருந்தனர். அரசன் நாட்டின் தலைவனாக இருந்தபோதிலும் அவன் மக்களைக் கலந்தே நாட்டை ஆண்டான்; பொதுமக்களது கருத்துப்படியே பணிபுரிந்தான். மேலும் அவன் சட்டம் இயற்றுவதோடு அமையாது அச்சட்டத்தின் துணை கொண்டு நாட்டின் நலத்தையும் அமைதியையும் காக்கும் காவலனாகவும் விளங்கினான். ஆட்சி செம்மையுற நடைபெறுவதற்கு ஆற்றல்மிக்க அமைச்சர்களும், ஏனாதி, மராயன் முதலிய அரசியல் அலுவலர்களும் அரசனுக்குப் பெரிதும் உதவினர். மேலும் அவைக்களப் புலவரும், அரசியல் குருவும் அக்காலத்தில் இருந்தனரெனவும், அமைச்சர் போன்றே அவர்