பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிறநாட்டார் ஆட்சிக் காலம்

139


மாமன்னன் கிருட்டிணதேவராயன் ஆட்சிக் காலத்தில் விசுவநாத நாயக்கன் தலைமையில் நாயக்க வமிசம் மதுரையை ஆளத் தொடங்கியது. விசுவநாதனது ஆட்சிக் காலம் கி. பி. 1529-64 வரை ஆகும். எனினும் இதற்கு முன்னரே விசய நகரப் பேரரசின் ஒரு பாகமாகத் திகழ்ந்த மதுரையை ஆள நாகம நாயக்கன் முதலில் அனுப்பப்பட்டான். ஆனால் அவன் தனது பேரரசின் ஆணைப்படி ஆட்சி புரிய மறுத்ததால், விசய நகர மன்னன் அவனைப் பதவியினின்று நீக்கிவிட்டு விசுவநாதனுக்கு அப்பதவியை அளித்தான். திருச்சியிலிருந்து தெற்கே கன்னியாகுமரி வரையிலும், மேற்கே கொங்கு நாடு வரையிலும் இவன் ஆட்சி செலுத்தினான். இவனது தலைமை அமைச்சராக விளங்கியவர் புகழ் வாய்ந்த அரிய நாத முதலியார் ஆவார். விசுவநாதன் காலத்தில்தான் தமிழ் நாட்டில் பாளையப்பட்டுகள் தோன்றின. தமிழ்நாடு 72 பாளையப்பட்டுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது. இவைகள் ஒன்பது பெரும் பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. பாளையப்பட்டுகளின் தலைவர்களாக விளங்கியவர்கள் பாளையக்காரர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் மதுரை நாயக்கர் வேண்டியபோது படைகள் அனுப்ப வேண்டும். அதற்குப் பதிலாக அவர்களுக்குத் தங்கள் பாளையப்பட்டுகளில் வரி வசூலிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. இதன் காரணமாய் நாட்டில் ஒழுங்கும்,அமைதியும் நிலவின. ஆந்திரருக்கும் தமிழ் மக்களுக்குமிடையே ஒற்றுமை நிலவியது.

விசுவநாதனுக்குப் பிறகு அவன் மகன் கிருஷ்ணப்ப நாயக்கன், மூன்றாம் கிருஷ்ணப்பன், இரண்டாம் வீரப்பன், திருமலை நாயக்கன், முதலாம் சொக்கநாதன், நான்காம் வீரப்பன் என்போர் முறையே தமிழ் நாட்டை ஆண்டனர். மூன்றாம் கிருஷ்ணப்பன் காலத்தில் தான், அதாவது கி. பி. 1601-1609-இல் சேதுபதி மன்னர்கள் இராமநாதபுரத்தில்