பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/193

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

தமிழ்நாடும் மொழியும்


தமிழின் இலக்கணத்தைச் செவ்வனே விரித்துக் கூறுகின்ற இலக்கண நூல்கள் முதலியவற்றைக் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்ல; அவர் காலத்து நாடகத் தமிழ் நூல்களிலிருந்து அந்தந்த இடங்களுக்கேற்ற சில நாடகத் தமிழ் நூற்பாக்களையும் இடையிடையே எடுத்துக்காட்டியுள்ளார். தொல்காப்பியர் காலத்திலே வள்ளிக் கூத்து வழக்கத்தில் இருந்ததாக அடியார்க்கு நல்லார் கூறியுள்ளார். சிலப்பதிகார அரங்கேற்றுக் காதையின் மூலம் அவர் காலத்தில் நாடகம் மிகச் சீரிய முறையில் விளங்கியது என்பதையும் நாடகத் தமிழ் நன்கு வளர்க்கப்பட்டது என்பதையும் நாம் உணரலாம்.

அகத்தியம், பரதம், மாபுராணம், பூத புராணம், முறுவல், சயந்தம், செயிற்றியம், குணநூல், பரத சேனாபதீயம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல் ஆகியன பண்டைக் காலத்தில் விளங்கிய நாடகத் தமிழ் நூல்களாம். அடியார்க்கு நல்லார் நாடகத் தமிழ் இலக்கண நூல்களைக் குறித்துள் ளாரே தவிர நாடகத் தமிழ் இலக்கிய நூல்களைக் குறிக்கவில்லை. இதனால் அவர் காலத்திலோ அன்றி சங்க காலத்திலோ நாடகத் தமிழ் இலக்கிய நூல்கள் இல்லை என்பது பொருளல்ல. இருந்து அவர் காலத்திலே இறந்திருக்கலாம். அவர் காலத்தில் கூட மேலே குறித்த அத்தனை இலக்கண நூல்களும் இருந்திருக்கவில்லை. அவரே அகத்தியம், பரதம், மாபுராணம், பூத புரணம் முதலிய நூல்கள் தன் காலத்தில் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் காலத்தில் நூல்வடிவிற் கிடைத்தவை மதிவாணர் நாடகத் தமிழ் நூல், பரத சேனாபதீயம் என்னும் இரண்டு நூல்களே. ஆனால் இவையும் இக்காலத்திற் கிடைக்கவில்லை. இந்நூல்களில் மிகப் பழமையானது என்று கருதப்படுவது முத்தமிழ் இலக்கணம் கூறும் அகத்தியமாகும். இது அகத்தியரால்