பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/211

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

தமிழ்நாடும் மொழியும்


கலந்து எழுதும் உரைநடையே மணிப்பிரவாள நடையாகும். மணி, பிரவாளம் என்பன முறையே முத்து, பவளம் என்று பொருள்படும். இவ்விரண்டையும் கலந்து ஒரு மாலை உண்டாக்கினால் அது எவ்வாறு இருக்குமோ அது போல வட சொல்லும் தமிழ்ச் சொல்லும் சேர்ந்து இம் மணிப்பிரவாள நடை விளங்கும். இதனைச் சிறப்பாகப் போற்றியவர்கள் வைணவரும் சமணரும் ஆவார்கள். கி. பி. 900 - லிருந்து ஏறத்தாழ 200 ஆண்டுகள் இந்நடை பெருமை பெற்றிலங்கியது. இந்நடையைப் பற்றி வி.கோ. சூ. அவர்கள் தமது நூலில் பின்வருமாறு எழுதியுள்ளார். 'மணிப்பிரவாளம் என்றதோர் புதிய பாஷை வகுத்துவிட்டனர். அஃதாவது வட மொழியும் தென் மொழியும் சரிக்குச் சரி கலந்த பாஷையாம். மணியும் பவளமும் கலந்து கோத்த தோர் மாலை, காட்சிக்கின்பம் பயத்தல் போல தமிழும் சமஸ்கிருதமும் கலந்த பாஷை கேள்விக்கின்பம் பயக்கும் என்ற போலி எண்ணமே இத்தகைய ஆபாச பாஷையை வகுக்குமாறு தூண்டிற்று.”

மணிப்பிரவாள நடையில் முதலில் தமது நூல்களை எழுதியவர் சமணரே. இவர்களைப் போலவே பெளத்தரும் நூல்கள் எழுதினர்கள். பல இலக்கியங்களையும் இலக்கணங்களையும் இயற்றித் தண்டமிழை வளர்த்த சமணர்கள் ஒரளவிற்குப் புதுக் கொள்கைகளும் தமிழிலே புகுவதற்குக் காரணமாக இருந்தார்கள் என்று கூற வேண்டும். இதன் காரணமாகத்தான் துாய தமிழ் நடை மணிப்பிரவாள நடையாக மாறிற்று. நம் தாயகத்தில் ஆட்சித் துறையிலும் சமயத் துறையிலும் மாறுதல்கள் நேர்ந்தபோது வடமொழி பயின்ற தமிழர்கள் மொழியின் அமைப்பையே மாற்றப் பெரிதும் முயன்றனர். இதனால் மணிப்பிரவாள நடையும் கிரந்த எழுத்து முறையும் தமிழில் ஏற்பட்டன. ஆனால் இம்முயற்சி