பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/237

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

தமிழ்நாடும் மொழியும்


வெட்டுக்கள் பேருதவி புரிகின்றன. தமிழ் நாட்டின் முப்பெரும் கவியரசர்களாகிய கம்பர், ஒட்டக்கூத்தர், சயங்கொண்டார் ஆகியோர் வாழ்ந்த காலம் இக்காலமே. சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியும், ஒட்டக்கூத்தர் உலாக்களும், குலோத்துங்க சோழன் சரிதையும் சிறந்த வரலாற்று இலக்கியங்களாகும். கொங்கு வேளிரது உதயணன் கதை, திருத்தக்க தேவரது சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, கல்லாடரது கல்லாடம், குலோத்துங்கன் கோவை, தஞ்சை வாணன் கோவை, தில்லை நம்பி திருவிளையாடல்,திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, சித்தாந்த சாத்திரங்கள், தனிப்பாடல்கள் பல முதலியன இக்காலத்து எழுந்த இலக்கியங்களாகும். இராசராசேசுவர நாடகம், இராசராச விசயம் என்ற செய்யுள் நாடகங்கள் இக்காலத்தில் எழுதப்பட்டு, ஊர்தோறும் நடிக்கப்பெற்றன. சோழ நாட்டின் அரசவைக் கவிஞராகிய ஒட்டக்கூத்தர், பிள்ளைத் தமிழ், உலா, தக்கயாகப்பரணி போன்ற பிரபந்தங்களை நமக்குத் தந்து சென்றார், கம்பர் அளித்த இராமாயணமும், செந்தமிழ்ப் புலவர் சேக்கிழார் தந்த பெரிய புராணமும் தமிழர் தம் ஒப்பற்ற இலக்கியங்களன்ருே! நளவெண்பாப் பாடிய புகழேந்தியும், ஆத்திசூடி முதலியன பாடிய ஒளவையும் வாழ்ந்த காலம் சோழர் காலமே.

சைவமும், வைணவமும் இக்காலத்தில் சிறந்து விளங் கியதால் சைவ, வைணவ இலக்கியங்கள் பல சோழர் காலத்தில் எழுந்தன. கலித்துறை, பிரசன்ன காயத்திரி, இராமாநுச நூற்றந்தாதி போன்ற வைணவ நூல்கள். இக்காலத்தில் தோன்றியவையே. இராமாநுசர், பெரிய வாச்சான் பிள்ளை போன்ற வைணவப் பெரியார்கள் இக்காலத்தில்தான் வாழ்ந்தனர். மெய்கண்டார், உமாபதி சிவம் முதலிய சைவ சித்தாந்தப் பெரியார்கள் இக்காலத்தின்