பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/244

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்மொழி வளர்ச்சி

227


கரந்தைத் தமிழ்ச் சங்கம்

தஞ்சையில் இன்று தமிழ் வளர்க்கும் சங்கங்களில் தலையாயது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும். இச்சங்கமானது கி. பி. 1911இல் சில தமிழார்வமிக்க இளைஞர்களால் தோற்றுவிக்கப்பட்டது. தமிழின் தனி நிலையைக் காத்தலே இச் சங்கத்தின் முதற்கடமையாகக் கருதப்பட்டது. இச்சங்கம் நடத்திய தனித் தமிழ் விரிவுரைகளும், தனித் தமிழில் இச்சங்கம் வெளியிட்ட அறிக்கை, அழைப்பு முதலியனவும் தமிழ்ப் பெருமக்கள் தனித் தமிழில் ஆர்வம் பெறச்செய்தன. இதன் காரணமாய் தமிழ்மொழியில் கலந்திருந்த ஆங்கிலஆரியச் சொற்களை நீக்கித் தூய தமிழ்ச் சொற்களை மக்கள் கையாண்டனர். திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்ட இச்சங்கத்தின் கிளையினால் ஆங்கிலப் பட்டப் படிப்புப் படித்துக் கொண்டிருந்த மாணவர் பலர் தமிழ்மீது மாறாக் காதல் கொண்டனர். மேலும் இச்சங்கத்தின் சலியாத உழைப்பினால் தமிழ்நாட்டு இரண்டு பல்கலைக் கழகத்தாரும், அரசியலாரும் தமிழுக்குத் தனிச்சிறப்பு அளித்தனர் என்று சொன்னால் அது மிகையாகாது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தார் தங்கள் பேரவைக்கு (செனட்) இச்சங்கம் ஒர் உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க உரிமை வழங்கியுள்ளனர். இச்சங்கத்தினரால் தொடங்கப்பெற்ற தொடக்கக் கல்லூரி இதுகாறும் பல ஆயிரக்கணக்கான த மி ழ் மாணவர்களைப் பயிற்றி அனுப்பியுள்ளது. ஏழை மாணவர்க்கு உண்டியும், உறையுளும் கொடுத்து, இக்கல்லூரி அவர்களை ஓம்பி வருவது குறிப்பிடத்தக்கதாகும் இச்சங்கத்தினரால் நிறுவப்பட் டுள்ள தமிழ் மருத்துவமனை தஞ்சையில் பல மக்களுக்கும் நோய் தீர்த்து வருகின்றது. மேலும் த மி ழ் மருத்துவ முறையை நாடெங்கனும் பரப்ப வேண்டுமென்பது இவர்களுடைய குறிக்கோள்களில் ஒன்றாகும்.