பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வரலாற்றிற்கு முற்பட்ட காலம்

19


நெய்தல், தோற் பதனிடுதல், நாணய மாற்று ஆகியவை வழக்கில் இருந்தன என அறியலாம்.

இவ்வித நாகரிக முன்னேற்றம் அடைந்த புதிய கற்கால மனிதன் முதலில் கற்கருவிகளை நன்முறையில் பதப்படுத்தினான்; வேட்டையாடுவதற்கு நாய்களை வளர்க்கத் தொடங்கினான்; உழவினை உயர்ந்த தொழிலெனக் கொண்டான். பழைய கற்கால மனிதன் உடுத்திய தோலாடை, மரவுரி, இலையாடை ஆகியனவற்றைச் சில குறிப்பிட்ட சமயங்களிலேயே புதிய கற்கால மனிதன் பயன்படுத்தினான். பாண்டங்களைப் போல ஆடைகளையும் பல வகை வண்ணங்களைக் கொண்டு நிறம் பெறச் செய்தான். சங்காலும் எலும்பாலும் ஆய பித்தான்கள், வளையல்கள் அக்காலப் பெண்டிர் தம் அணிகலன்களாம். புதிய கற்காலப் பொம்மைகள் சில சேலம் மாவட்டத்திலே கண்டெடுக்கப்பட்டுள்ளன. அப்பொம்மைகள் மூலம் அக்காலப் பெண்டிர் தம் கலையுணர்வை நன்கு அறியலாம்.

பழைய கற்காலத்தில் ஒருவனே எல்லாத் தொழில்களையும் செய்தான். புதிய கற்காலத்திலோ ஒவ்வொரு மனிதனும் தனித் தனியாக வெவ்வேறு தொழிலைச் செய்யத் தொடங்கினான். மனிதன் தனிநிலையிலிருந்து குடும்பமாக மாறும்பொழுதும் இவ்வாறே ஒவ்வொரு குடும்பமும் தனித்தனித் தொழிலைச் செய்ய முற்பட்டது. இவ்வாறு தொழில் பற்றிப் பிரிவுகள் பல மக்கள் சமுதாயத்திலே ஏற்பட்டன. பின்வந்த மற்றவர் அப்பல்வேறு பிரிவுகட்கும் இடையே பற்பல வேற்றுமைகளைக் கற்பித்து அவற்றை ஒன்று சேராதவாறு நூல்கள் செய்தும், கருத்துக்களைப் பரப்பியும் பார்த்துக்கொண்டனர்.

பழைய கற்கால மக்களை விடப் புதிய கற்கால மக்கள் கொஞ்சம் அதிகமாகக் கலையுணர்ச்சியுடையவராய் இருந்த-