பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

தமிழ் நாடும் மொழியும்


'உற்றுளி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே
.................................................................
அறிவுடை யோனாறு அரசுஞ் செல்லும்'

என்னும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூற்றால் சங்ககாலக் கல்விமுறை நன்கு விளங்கும். அதுமட்டுமின்றி அங்கங்கே வரும் வானநூற் கருத்தும், மருத்துவமுறைக் குறிப்பும் பண்டைக்காலக் கல்வி முறையை நன்கு தெளிவுறுத்தும்.

பண்டு மன்னருட் பலர் பெரும் புலவர்களாகத் திகழ்ந்தனர். பெண்பாலரும் கல்வியிற் சிறந்து விளங்கினர். பெருங் காக்கை பாடினியார், சிறு காக்கை பாடினியார், நச்செள்ளையார், குறமகள் இளவெயினியார், ஒளவையார் போன்ற பல பெண்பாற் புலவர்கள் இருந்தனர். சங்கமிருந்து தமிழ் வளர்த்த புலவர்கள் நாற்பத்தொன்பதின்மர் ஆவர். இவர்கள் பற்பல நூல்களியற்றிப் புகழ்பெற்றனர். சுருங்கக் கூறின் அக்காலத்தில் கல்வியின் உயர் நிலை நன்கு உணரப்பட்டது.

பொருளாதாரம்

சங்ககாலப் பொருளாதாரம் ஓரளவு நல்ல நிலையிலேயே இருந்தது. பெரும்பாலும் பண்டமாற்றே வழக்கத்தில் இருந்துவந்தது. உள் நாட்டு வாணிகம் வண்டியின் மூலமாகவும், வெளிநாட்டு வாணிகம் கலத்தின் மூலமாகவும் நடைபெற்றன. குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் ஆகிய நால்வகை நிலப்பொருட்களும் வந்து குவியுமிடம் மருதமாகும். குறிஞ்சி நில மக்கள் தமது தேன், சந்தனம், அகில் முதலியனவற்றையும், முல்லை நிலத்தார் பாலையும் மோரையும் தயிரையும், நெய்தல் நிலத்தார் உப்பு முதலியவற்றையும்,